

உலக கோடீஸ்வரர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் ரூ.58,104 கோடியை வரி இனங்களுக்காக செலுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த குழுமம் வெளியிட்ட அறிக்கையில் " அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், உலகளாவிய வரிகள், தீர்வை, இதர கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்காக நேரடி வரி பங்களிப்பாக கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.58,104 கோடியை செலுத்தியுள்ளது. இது, 2022-23-ம் நிதியாண்டில் செலுத்திய ரூ.46,610 கோடியை காட்டிலும் கணிசமாக அதிகம்" என்று தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் , அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்கள் இந்த வரி பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், மத்திய அரசுக்கு வரி செலுத்துவதில் மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் ஒருவராக அதானி குழுமம் உள்ளது.
இக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறுகையில், “ இந்த அறிக்கைகளை பொதுமக்களின் பார்வைக்கு தாமாக முன்வந்து பகிர்வதன் மூலம், பங்குதாரர்களின் நம்பிக்கையை வளர்ப்பதையும், பொறுப்பான கார்ப்பரேட் நடத்தைக்கான புதிய வரையறைகளை அமைப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.