

திருப்பூர்: நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40 ஆயிரம் கோடியை எட்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனவரி 2025-க்கான திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி எதிர்பார்ப்புகளை தாண்டி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.
ஆயத்த ஆடை ஏற்றுமதிப் புள்ளி விவரங்கள் (ஆர்எம்ஜி) கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,441 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகரித்து, 1,606 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ஆண்டுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி கடந்த 10 மாதங்களோடு ஒப்பிடுகையில் தோராயமாக 12 சதவீதம் வளர்ச்சி உள்ளது.
ஏற்றுமதி 11,583 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 12,923 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிப்பாதை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொழில் துறையின் நேர்மறை வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40 ஆயிரம் கோடியை எட்டும். மேலும் இந்த நிதியாண்டின் 10 மாதங்களின் ஏற்றுமதியானது கடந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி அளவை சமன் செய்துவிட்டது.
நமது கூட்டு முயற்சியின்மூலம், வர்த்தகர்கள் திருப்பூரை ஆடை ஏற்றுமதிக்கான நிலையான மற்றும் நம்பகமான கிளஸ்டராக அங்கீகரித்துள்ளனர். பாரத் டெக்ஸ் 2025-ல் நமது சமீபத்திய பங்கேற்பு, இதனை வலுப்படுத்தி உள்ளது.
இது திருப்பூரைச் சேர்ந்த உற்பத்தியாளர்களிடம் அதிக ஆர்டர்களை வழங்க வழிவகுக்கும். திருப்பூரின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை தொழில் துறையினருக்கு வலியுறுத்துவதன் மூலம், இனிவரும் மாதங்களில் மேலும் ஏற்றுமதி வலுவடையும். வளர்ச்சியும் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.