“வளர்ச்சியடைந்த இந்தியா... வெறும் கனவு அல்ல, நமது இலக்கு!” - குடியரசுத் துணைத் தலைவர்

“வளர்ச்சியடைந்த இந்தியா... வெறும் கனவு அல்ல, நமது இலக்கு!” - குடியரசுத் துணைத் தலைவர்
Updated on
1 min read

புதுடெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் கனவு அல்ல, அது நமது இலக்கு என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் மொஹாலியில் தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் மேம்பட்ட தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் ஒரு விவசாயியின் மகன். விவசாயியின் மகன் எப்பொழுதும் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வான்.

இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வாழ்கிறது, கிராமப்புற அமைப்பு நாட்டின் முதுகெலும்பாகச் செயல்படுகிறது. கிராமங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதை. வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் கனவு அல்ல, அது நமது இலக்கு.

நமது கடந்த கால வரலாற்றை ஆராய்ந்தால், இந்தியா அறிவு மற்றும் ஞானத்தின் நாடாக இருந்துள்ளது. குறிப்பாக அறிவியல் மற்றும் வானியலில் சிறந்து விளங்கியுள்ளது. மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நமது வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் போன்றவற்றில் பிரதிபலிக்கின்றன. நாலந்தா, தக்ஷஷிலா போன்ற தொன்மையான நிறுவனங்களைக் கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்ளும் நாடாக நமது நாடு திகழ்கிறது.

வேளாண்மை மற்றும் பால் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் சிறு தொழில்கள் மூலம் கிராமப்புறப் பொருளாதாரங்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட வேண்டும். கிராமங்களில் பண்ணையில் குறுந்தொழிற்சாலைகளை நடத்தும் சூழல் உருவாக வேண்டும். அதன் மூலம் வேளாண் உற்பத்திக்கு மதிப்பு கூட்டல் ஏற்படும். இது ஒரு நிலையான வளர்ச்சியைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உதவுவதுடன் ஊட்டச்சத்து மதிப்பையும் நிச்சயமாக உயர்த்தும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in