17 ஆண்டுகளில் முதல் முறை: ரூ.262 கோடி லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல் - 9 கோடி வாடிக்கையாளர்களுடன் வளர்ச்சி

17 ஆண்டுகளில் முதல் முறை: ரூ.262 கோடி லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல் - 9 கோடி வாடிக்கையாளர்களுடன் வளர்ச்சி
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், நடப்பு 2024-25 நிதியாண்டின் 3-வது காலாண்டு (அக்டோபர் - டிசம்பர்) நிதிநிலை அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இன்று முக்கியமான நாள். டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. இதன் மூலம் கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக காலாண்டு காலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை பதிவு செய்துள்ளது. இது இந்நிறுவனத்துக்கு திருப்புமுனை ஆகும்.

இந்த காலகட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன் சேவை பிரிவின் வருவாய் 15%, வீடுகளுக்கான பைபர் சேவை பிரிவின் வருவாய் 18%, குத்தகை சேவை வருவாய் 14% உயர்ந்துள்ளது. இது, பிஎஸ்எல்எல் நிறுவனம் புத்தாக்கம், நெட்வொர்க் விரிவாக்கம், செலவு குறைப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,100 கோடியாக இருந்த வரிக்கு முந்தைய வருவாய் (எபிடா), 2023-24 நிதியாண்டில் இரு மடங்காகி ரூ.2,100 கோடி யாகி உள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதியில் ஒட்டுமொத்த வருவாய் அதிகரிப்பதுடன் செலவும் கட்டுக்குள் வரும். கடந்த ஆண்டைவிட இழப்பும் குறையும்.

கடந்த ஜூன் மாதம் 8.4 கோடியாக இருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் 9 கோடியாக அதிகரித்துள்ளது.

பிஎஸ்என்எல் இப்போது நாடு முழுவதும் உள்ள வாடிக்கை யாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 1 லட்சம் டவர்கள் அமைக்க திட்டமிடப் பட்டு அவற்றில் 75 ஆயிரம் டவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 60 ஆயிரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வரும் ஜூன் மாத வாக்கில் 1 லட்சம் டவர்களும் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in