

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி மகசூல் குறைந்து நடப்பாண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் விலையும் கிலோ ரூ.130 என குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் தென்னை, ரப்பர், வாழை போன்ற பணப்பயிர்களுக்கு மத்தியில் தண்ணீர் வசதியில்லாத பனை, மற்றும் பிற மரங்கள் நிறைந்த பகுதிகளில் அண்டி என பேச்சு வழக்கில் கூறப்படும் முந்திரி விவசாயம் பரவலாக உள்ளது. உலர் பருப்பு வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்த தரமான முந்திரி பருப்பு கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது.
குமரி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட முந்திரியை தரம் பிரிக்கும் ஆலைகள் உள்ளன. இங்கிருந்து கேரளா மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் முந்திரி பருப்பு ஏற்றுமதி ஆகிறது. குமரி மாவட்டத்தில் முந்திரி விவசாயம் மூலம் குறைந்த அளவே முந்திரி காய்கள் கிடைக்கிறது. இதனால் பிற இடங்களில் இருந்து முந்திரி காய்கள் கொண்டு வரப்பட்டு தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது முந்திரி தோட்டங்களில் சீஸன் துவங்கியுள்ளது. கோடைகாலத்தில் அதிகம் பல வண்ணங்களில் பழத்துடன் பூத்து குலுங்கும் முந்திரி சீஸன் வருகிற மே மாதம் வரை நீடிக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு குமரி மாவட்டத்தில் முந்திரி மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலே முந்திரி பிஞ்சுகள் பிடித்து வழக்கத்தைவிட மூன்றில் ஒரு பங்கு முந்திரி காய்கள் மட்டுமே கிடைக்கிறது. வழக்கமாக மகசூல் குறையும் நேரத்தில் விலை ஏற்றம் அடைவது இயல்பு. ஆனால் தற்போது விலையும் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு நல்ல மகசூலின்போதே, விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ முந்திரி காய் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது குறைவான முந்திரி காய் கிடைத்தபோதும் கிலோ ரூ.130-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து குமரி முந்திரி விவசாயிகள் கூறுகையில், "வருடத்திற்கு ஒரு முறை நல்ல மகசூல் கொடுக்கும் முந்திரி காய்களை விற்று குடும்பத்தின் சிறிய செலவிற்கு பயன்படுத்தி வந்தோம். ஆனால் இந்த ஆண்டு பூச்சி தாக்குதல், மற்றும் வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவு போன்றவற்றால் பூக்கள் உதிர்ந்து குறைவான பிஞ்சுகள் பிடித்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. இந்நேரத்தில் நல்ல விலை கிடைக்கும் என நம்பி இருந்தோம்.
ஆனால் கடந்த ஆண்டைவிட குறைந்து ரூ.130-க்கு கொள்ளுதல் செய்யப்படுகிறது. குமரி மாவட்ட முந்திரி ஆலைகளுக்கு தேனீ, கம்பம், இலங்கை போன்ற பகுதிகளில் இருந்து அதிக முந்திரிகள் வருகின்றன. இதனால் இந்த விலை இழப்பு ஏற்பட்டுள்ளது. முந்திரிக்கு நல்ல விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே இந்த விவசாயத்தில் ஆர்வம் அதிகரிக்கும்" என்றனர்.