

கவுதம் அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், இலங்கையில் தொடங்க திட்டமிட்டிருந்த 2 காற்றாலை மின் திட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலை மின் திட்டம் மற்றும் இரண்டு மின் பரிமாற்ற திட்டங்களிலிருந்து வெளியேற அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு முடிவெடுத்துள்ளது. இது எந்தவித வற்புறுத்தலும் இன்றி தாமாக முன்வந்து மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு.
இலங்கை அரசு அரசு விரும்பினால் எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயல்படவும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு அதானி கிரீன் தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அநுரா குமாரா திசநாயகே தலைமையிலான நிர்வாகம் மின்சார செலவை குறைக்கும் வகையில் கட்டண விகிதங்கள் குறித்து மறுபேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதானி கிரீன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கும், அதனை பயனாளர்களுக்கு எடுத்து செல்லக்கூடிய டிரான்ஸ்மிட்டிங் லைன்களை அமைப்பதற்கும் 1 பில்லயன் டாலரை அதானி கிரீன் எனர்ஜி முதலீடு செய்யவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இலங்கையின் மிகப்பெரிய கொழும்பு துறைமுகத்தில் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான முனைய திட்டங்களில் அதானி குழுமம் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது.