

புதுடெல்லி: திருநெல்வேலி - தூத்துக்குடி NH138-ன் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஏற்பட்ட மூலதனச் செலவு ரூ.568.14 கோடி. இதில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கான மூலதனச் செலவுக்காக வாங்கப்பட்ட கடன்களுக்கான வட்டி சேர்க்கப்படவில்லை. வாகைகுளம் சுங்கச் சாவடியில் பயனர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.219 கோடி” என்று திமுக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, “வாகைகுளம் சுங்கச் சாவடியில் நூறு சதவீத சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை (NH138) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மோசமாகப் பராமரிக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு அறிந்திருக்கிறதா? அறிந்திருந்தால், அதன் விவரங்கள் என்ன?
வாகைக்குளம் சுங்க சாவடியில் நியாயமற்ற கட்டண முறையைத் தடுக்கவும் மற்றும் சாலையின் பராமரிப்பை உறுதி செய்யவும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? சாலை பராமரிப்புக்காக செலவிட்டப்பட்ட தொகை எவ்வளவு? அதேபோல, வாகைகுளம் சுங்கச்சாவடி மூலமாக இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு? வாகைகுளம் சுங்கச்சாவடி அதன் செயல்பாடுகளை தொடர காலஅளவு ஏதேனும் நிர்ணையிக்கப்பட்டிருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு எழுத்து மூலமாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள பதிலில், “தேசிய நெடுஞ்சாலை 138-ல் முக்கிய பராமரிப்புப் பணிகள் 2024 ஆகஸ்டில் நிறைவடைந்தன.மேலும், போக்குவரத்தை எளிமையாக்குவது உள்ளிட்ட வழக்கமான பராமரிப்பு நடவடிக்கைகள் ஒ அண்ட் எம் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. என்எச்-138 இன் தூத்துக்குடி-திருநெல்வேலி பகுதி போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
என்எச்-138 இன் தூத்துக்குடி-திருநெல்வேலி பிரிவுக்கான பயனர் கட்டணம் 2008-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படியும், அதில் செய்யப்பட்ட திருத்தங்களின்படியும் வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலி-தூத்துக்குடி பிரிவின் என்எச்-138 இன் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஏற்பட்ட மூலதனச் செலவு ரூ.568.14 கோடி . இதில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கான மூலதனச் செலவுக்காக வாங்கப்பட்ட கடன்களுக்கான வட்டி சேர்க்கப்படவில்லை. வாகைகுளம் சுங்கச் சாவடியில் பயனர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.219 கோடி” என்று பதில் அளித்துள்ளார்.