

‘அரசு நலத் திட்டங்களால் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வேலை செய்யத் தயாராக இல்லை’ என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த சிஐஐ கூட்டமைப்பின் சார்பில் நடந்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய எஸ்.என்.சுப்ரமணியன், “எல் அண்ட் டி நிறுவனத்தில் 2.5 லட்சம் ஊழியர்கள், சுமார் 4 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். என் நிறுவனத்திலிருந்து சில ஊழியர்கள் விலகிச் செல்லலாம். சிலர் பணியிழக்கலாம். அவையெல்லாம் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சமீபகாலமாக கட்டுமானத் தொழிலாளர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் வருத்தமளிக்கிறது.
இப்போதைய சூழலில் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து பணி புரிய விரும்புவதில்லை. இதற்கு அரசாங்கம் செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களும் ஒரு காரணம். தொழிலாளர்கள் பலருக்கும் நேரடியாக கிடைக்கும் நலத்திட்டங்களால் (நேரடிப் பலன் பரிவர்த்தனை) அவர்கள் இருக்கும் இடத்திலேயே பொருளாதார தன்னிறைவைத் தந்துவிடுகிறது. இதனால் அவர்கள் புலம்பெயர விரும்புவதில்லை. அரசாங்க நலத்திட்டங்களால் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து உழைக்கத் தயாராக இல்லை. புதிய வாய்ப்புகளுக்காக புலம்பெயர அவர்கள் விரும்புவதில்லை.
எல் அண்ட் டி நிறுவனத்தில் தொழிலாளர்களை பணிகள் நடைபெறும் இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு, பணியமர்த்துவதற்கு என பிரத்யேக மனிதவள மேலாண்மைக் குழு இருந்தும் கூட இன்றைய காலகட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவது கடினமாக இருக்கிறது.
இந்த மனப்பாண்மை ப்ளூ காலர் பணியாளர்களிடம் மட்டுமே இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஒயிட் காலர் பணியாளர்களுக்கும் இந்த மனநிலை இருக்கிறது. எல் அண்ட் டி நிறுவனத்தில் நான் பொறியாளராக சேர்ந்த போது என் தலைவர், “நீ சென்னையில் இருந்து வந்தால் டெல்லி சென்று வேலை செய்.” என்றார். ஆனால் இன்று நான் ஒரு ஊழியரிடம் அப்படிச் சொன்னால் அவர் ‘பை’ என்று சொல்லிவிட்டுச் செல்வார். இன்றைய வேலை கலாச்சாரம் மாறிவிட்டது. ஊழியர்களுக்கு ஏற்ப ஹெச்ஆர் கொள்கைகளை எப்படி வளைப்பது என்று பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது” என்றார்.
ஞாயிறு வேலை பற்றி சர்ச்சைப் பேச்சு.. ஏற்கெனவே, “ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். எவ்வளவு நேரம் தான் மனைவியும் கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியும். வாருங்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பாருங்கள்” என ஊழியர்கள் மத்தியில் எஸ்.என்.சுப்ரமணியன் பேசி சர்ச்சையைக் கிளப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.