ஓபன் AI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க விரும்பும் எலான் மஸ்க்: சாம் ஆல்ட்மேன் மறுப்பு!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நியூயார்க்: தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு ஒன்று சாட்ஜிபிடி சாட்பாட்டை வடிவமைத்த ஓபன் ஏஐ நிறுவனத்தை சுமார் 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக சட்ட ரீதியான நகர்வுகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தகவல்.

கடந்த 2015-ல் ஓபன் ஏஐ நிறுவனம் நிறுவப்பட்ட போது அதன் இணை நிறுவனராக மஸ்க் இருந்தார். லாப நோக்கற்ற செயல்பாட்டில் இருந்து ஓபன் ஏஐ நிறுவனம் லாபத்தை நோக்கி மாறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதன் பின்னணியில் அந்த நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஏஐ சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதி திரட்டவும் சாம் ஆல்ட்மேன் திட்டமிட்டுள்ளார். இந்த சூழலில் தான் மஸ்க் கொடுத்த 97.4 பில்லியன் டாலர் ஆஃபரை அவர் நிராகரித்துள்ளார். வேண்டுமானால் ட்விட்டர் (இப்போது எக்ஸ்) தளத்தை 9.74 பில்லியனுக்கு வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுக்கு பிப்.10-ம் தேதி அன்று தங்களது 97.4 பில்லியன் டாலர் ஆஃபரை மஸ்க் மற்றும் இன்னும் சில முதலீட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளனர். இதை மஸ்க் தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். வேண்டுமானால் அந்த தொகையை இன்னும் கூட்டி வழங்க தங்கள் தரப்பு தயார் என்றும் மஸ்க் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயல்பாட்டை மஸ்க் விமர்சித்து வருகிறார். அது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார். லாப நோக்கமற்ற செயல்பாட்டில் இருந்து ஓபன் ஏஐ பாதை மாறி விட்டதாகவும் அவர் சொல்லியுள்ளார். மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஓபன் ஏஐ இணக்கமாக பணியாற்றி வருவதையும் விமர்சித்துள்ளார்.

தன்னிடம் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமென மஸ்க் விரும்பினார். அது முடியாது என அறிந்ததும் அவர் விலகினார். முன்னதாக, லாபம் சார்ந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு அவரும் சம்மதம் சொல்லி இருந்தார் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in