

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க பணவியல் கொள்கை குழு (எம்பிசி) ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா நேற்று கூறியதாவது: கரோனா பேரிடரின் மோசமான பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ள கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு வட்டி குறைப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க எம்பிசி குழு ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, இந்த வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பணவீக்கம் குறைந்து வருவதையும், உணவுப் பொருட்களின் மதிப்பீட்டில் சாதகமான நிலை உள்ளதையும் எம்பிசி குழு கவனத்தில் கொண்டுள்ளது. இந்த ரெப்போ வட்டி குறைப்புக்கு பிறகான முன்னேற்றமான சூழலை கருத்தில் கொண்டு 2025-26-ல் இந்த விகிதத்தை மேலும் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
சர்வதேச நிதி சந்தை மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கையில் நிச்சயமற்ற தன்மை, சாதகமற்ற வானிலை ஆகியவை தற்போது நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு சவாலானதாக மாறியுள்ளது. அதனையும் எம்பிசி குழு கவனத்தில் கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி: வரும் 2025-26-ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீடான 6.6 சதவீதத்தை காட்டிலும் குறைவாகும்.
வங்கிகளுக்கு பிரத்யேக டொமைன்: நிதி மோசடிகளை தடுக்கவும், ஆன்லைன் நிதிப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முக்கிய முடிவாக இந்திய வங்கிகளுக்கு " bank.in” என்ற பிரத்யேக இணையதள டொமைனை 2025 ஏப்ரல் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் பிரத்யேகமாக " fin.in” என்ற டொமைன் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு மல்கோத்ரா கூறினார்.
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை மத்திய அரசு ரூ.12 லட்சமாக உயர்த்திய நிலையில் தற்போது அதற்கேற்ப பொருளாதார சுழற்ச்சியை அதிகரிக்க ரிசர்வ் வங்கியும் தனது பங்கிற்கு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.