

புதுடெல்லி: சூரிய மின்சக்தி திறனில் இந்தியா 100 ஜிகாவாட் எனும் மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ இது வழிகோலுவதாகவும் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரஹலாத் ஜோஷி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. சூரிய சக்தி பேனல்கள், சூரிய சக்தி பூங்காக்கள் மற்றும் கூரை சூரிய சக்தி திட்டங்கள் போன்ற முயற்சிகள் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக, இன்று இந்தியா 100 GW சூரிய சக்தி உற்பத்தி என்ற இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது. பசுமை எரிசக்தி துறையில், இந்தியா தன்னிறைவு பெறுவது மட்டுமல்லாமல், உலகிற்கு ஒரு புதிய பாதையையும் காட்டி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில், "100 GW சூரிய சக்தி உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டி இருப்பதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உலகளாவிய தலைவராக இந்தியா உருவெடுக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் 500 GW புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி திறனை அடைய வேண்டும் எனும் நாட்டின் இலக்கிற்கு இது சாதகமாக உள்ளது.
வீட்டுக் கூரைகள் மூலம் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளவும், குடிமக்களுக்கு சுத்தமான, நிலையான மின்சாரத்தை வழங்கவும் உதவும் PM சூர்யா கர் முஃப்த் பிஜ்லி திட்டத்தின் வெற்றியையே இது காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய சக்தித் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 3,450% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் மூலம் 2014-ல் 2.82 ஜிகாவாட்டாக இருந்த சூரிய சக்தி உற்பத்தி திறன், 2025-ல் 100 GW ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் சூரிய சக்தி 47% ஆகும். 2024-ம் ஆண்டில் மட்டும், 24.5 ஜிகாவாட் சூரிய சக்தி திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை பயன்பாட்டு அளவில் முன்னணி மாநிலங்களாக உள்ளன. வீட்டுக் கூரைகளில் சூரிய சக்தி உற்பத்திக்காக நிறுவப்பட்டுள்ள சோலார் பேனல்கள், கடந்த ஆண்டில் 53% அதிகரித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.