Published : 05 Feb 2025 10:30 AM
Last Updated : 05 Feb 2025 10:30 AM
சென்னை: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.5) பவுனுக்கு ரூ.760 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஒரு பவுன் விலை ரூ.59 ஆயிரத்தை கடந்தது. பின்னர் சற்று குறைந்து, மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 22-ம் தேதி ரூ.60,200 ஆக இருந்தது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் எதிரொலியாக ரூ.62,320 ஆக உயர்ந்தது. 10 நாட்களில் பவுன் விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது. 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதே விலையே நீடித்தது.
கடந்த 3-ம் தேதி ஒரு கிராம் ரூ.7,705, ஒரு பவுன் ரூ.61,640-க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.105 என பவுனுக்கு ரூ.840 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,810-க்கும், ஒரு பவுன் ரூ.62,480-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
தொடர்ந்து இன்று பிப்ரவரி 5 காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.63,240-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீது கட்டவிழ்த்துள்ள வர்த்தக போர் தங்கம் விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மேலும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கப்படவில்லை. தவிர, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது ஆகியனவும் தங்கம் விலை ஏற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT