பட்ஜெட் எதிரொலியால் பவுன் ரூ.62,320 ஆக வரலாறு காணாத உச்சம்

பட்ஜெட் எதிரொலியால் பவுன் ரூ.62,320 ஆக வரலாறு காணாத உச்சம்

Published on

சென்னை: பட்ஜெட் எதிரொலியாக, தங்கம் விலை நேற்றும் புதிய உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.62,320-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனையானது. பின்னர், விலை குறைந்து, மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு பவுன் தங்கம் விலை கடந்த ஜனவரி 22-ம் தேதி ரூ.60,200, கடந்த 24-ம் தேதி ரூ.60,440, கடந்த 29-ம் தேதி ரூ.60,760, கடந்த 30-ம் தேதி ரூ.60,880 என தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சங்களை தொட்டது.

31-ம் தேதி கிராமுக்கு ரூ.120 என பவுனுக்கு ரூ.960 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,730-க்கும், ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை நேற்றும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. நேற்று கிராமுக்கு ரூ.60 என பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,790-க்கும், ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்கப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,498, ஒரு பவுன் ரூ.67,984 என இருந்தது.

தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தங்க நகை, வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியபோது, ‘‘மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கப்படவில்லை. அத்துடன், சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால், தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது’’ என்றார்.

வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. கடந்த 31-ம் தேதி போலவே நேற்றும் ஒரு கிராம் விலை ரூ.107, ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,07,000 ஆக இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in