‘2025 பட்ஜெட் புதிய உத்வேகம் தரும்’ - பிரதமர் மோடி உறுதி

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: “பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெறும். புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள், மூலதனம் ஆகியன தான் இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக இருக்கின்றன. அந்தவகையில், இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகம் தரும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜன.31) தொடங்கியுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் வருகைதந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று அன்னை லட்சுமியை பிரார்த்தனை செய்கிறேன். ஏழை, எளிய மக்களை அன்னை லட்சுமி ஆசிர்வதிப்பார். மூன்றாவது முறையாக ஆட்சி செய்ய எங்களுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். பாஜகவின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெற்றிருக்கும். புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள், மூலதனம் ஆகியன தான் இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக இருக்கின்றன. அந்தவகையில், இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தைத் தரும்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க சில மசோதாக்கள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. மகளிர் முன்னேற்றத்துக்காக, இளைஞர் நலனுக்கு சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியன நமது அடுத்த இலக்குகளாக இருக்கப்போகிறது.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து இந்த அரசு பாடுபடும். இந்தியாவின் வளர்சிக்காக அனைத்து எம்.பி.க்களும் தங்கள் பங்களிப்பை செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

இந்தியா ஜனநாயக நாடாகி 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம். இந்தத் தருணத்தில் உலக அரங்கில் இந்தியா தன்னை வலுவாக நிலைநிறுத்தியுள்ளது. 2047 ஆம் ஆண்டில் இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

2014-க்குப் பின் முதன்முறையாக.. தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “2014-க்குப் பின்னர் முதன்முறையாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக அந்நிய தலையீட்டால் ஏதும் சலசலப்புகள் ஏற்படவில்லை. அத்தகைய சலசலப்புகளுக்கு இங்கே சில விசிறிகள் நிரந்தமராக இருக்கும் சூழலிலும் கூட அப்படியான தலையீடுகள் ஏதும் இல்லாமல் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in