

புதுடெல்லி: பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவு வரவிருக்கிறது என "ரிச் டாட் புவர் டாட்" என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
பங்குச் சந்தை வரலாற்றில் மிகப் பெரிய சரிவு காத்திருக்கிறது. அநேகமாக, இந்த சரிவு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சந்தை வீழ்ச்சியை நெருக்கடி நிலையாக மட்டும் கருதிவிடக்கூடாது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக இது அமையும்.
ஏனெனில், சந்தை வீழ்ச்சியானது நல்ல பங்குகளை குறைந்த விலையில் அதிகம் வாங்கும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சியின்போது வீடு, வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை அதிகளவில் அணுகக்கூடியதாக மாறுகின்றன என்பதே உண்மை.
மேலும், பாரம்பரிய சந்தைகளில் இருந்து மாற்று முதலீடுகளை நோக்கி, குறிப்பாக பிட்காயின் நோக்கிய மூலதனத்தின் நகர்வு நம்பிக்கைக்குரிய முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கிறது . கிரிப்டோகரன்சி மதிப்புகளில் கணிசமான வளர்ச்சி வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போலி முதலீட்டு திட்டங்களில் இருந்து வெளியேறி பிட்காயினில் முதலீடு செய்வது குறித்து சிந்திக்க வேண்டும். ஏனெனில், பல்வேறு முதலீட்டாளர் குழுக்கள் இடையே தற்போது கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. சந்தை நிச்சயமற்ற தன்மையில் இருக்கும்போது மற்ற முதலீடுகளின் மதிப்பு குறைகிறது. ஆனால், பிட்காயின் மதிப்புமிக்கதாக மாறுகிறது.
இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்.