

சென்னை: நாட்டின் நேரடி வரி வசூலிப்பதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்தியம் 4-வது இடத்தில் உள்ளதாக வருமானவரி துறை தலைமை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தெரிவித்துள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், தலைமை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் சிறப்பாக பங்களித்து வருகின்றனர். மத்திய அரசுக்கு கிடைக்கும் வரிவருவாயில் 54 சதவீதம் வருமானவரித் துறையின் பங்களிப்பாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.22.7 லட்சம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் அடிப்படை கட்டுமான வளர்ச்சிக்கு வருவாய் தேவைப்படுகிறது. இந்த இலக்குகளை அடையும் வகையில் வருமானவரித் துறை செயல்பட்டு வருகிறது.
நாட்டின் நேரடி வரி வசூலிப்பதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்தியம் 4-வது இடத்தில் உள்ளது. நடப்பு 2024-25-ம் நிதியாண்டில் ரூ.1.39 ஆயிரம் கோடி வரிவசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள், ஊழியர்கள் கடினமாக உழைப்பதோடு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த இலக்கை எளிதில் அடையலாம். 2024-25-ம் நிதியாண்டில் ரூ.21 ஆயிரம் கோடிக்கணக்கான வரித்தொகை (ரீஃபண்ட்) திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.