அடுத்த 2 ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்படும்: ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பா ராவ் தகவல்

அடுத்த 2 ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்படும்: ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பா ராவ் தகவல்
Updated on
1 min read

சென்னை: அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. விழாவில், ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பா ராவ் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:

சென்னை ஐ.சி.எஃப், கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி 75,000-வது பெட்டியை தயாரித்து வரலாற்று சாதனை படைத்தது. இங்கு இதுவரை 81 வந்தே பாரத் ரயில்கள் (சேர் கார்) தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, நமோ பாரத் ரயில் தயாரித்து வழங்கினோம். இந்த ரயில் அகமதாபாத் - புஜ் இடையே இயக்கப்படுகிறது.

இரவு நேர பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் தயாரிப்பிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். முதல் ரயில் தயாரித்து, சோதனை நிறைவடைந்துள்ளது. வரும் மாதங்களில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.

இந்த மாத இறுதிக்குள்... ஏசி அல்லாத ரயில் பிரிவில், அம்ரித் பாரத் விரைவு ரயில்களை இந்திய ரயில்வே பெரிய அளவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ரயில், பயணிகளுக்கு மலிவு விலையில் நவீன வசதிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டது. முதல் ரயிலை இந்த மாத இறுதிக்குள் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்களை தயாரித்து வழங்கப்பட உள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் செல் ரயில் பெட்டிகளுக்கான முதன்மைத் திட்டத்திலும் பணியாற்றுகிறோம். ஐ.சி.எஃப் ஆலையில் ஹைட்ரஜன் எரிபொருள் பெட்டிகள் தற்போது உற்பத்தியில் உள்ளன. இந்த ரயில் பெட்டிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in