

கோவை: கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் குடியரசு தினத்தன்று முன்னறிவிப்பு இன்றி செயல்பட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தி 155 உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது தொழிலாளர் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கூடுதல் தலைமை செயலர், தொழிலாளர் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்களின் தலைமையில் குடியரசு தினத்தன்று கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்னறிவிப்பு அளிக்காமல் தொழிலாளர்களை அன்றைய தினம் பணிபுரிய அனுமதித்த 78 கடைகள் மற்றும் நிறுவனங்கள். 7 உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட மொத்தம் 155 உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவறு இழைத்த நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கையை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்களில் அடுத்த மாதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய மாற்று விடுப்போ (அல்லது) இரட்டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டுள்ளதா என கண்டறியப்படும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து நிறுவனங்களும் வருடத்தில் தேசிய பண்டிகை தினங்களான ஜனவரி 26, மே 01, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 02 ஆகிய தேதிகள் மற்றும் குறைந்தது ஐந்து பண்டிகை விடுமுறை நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விடுமுறை தினங்களில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படும் பட்சத்தில் உரிய படிவத்தில் தொழிலாளர்களிடம் ஒப்புதல் பெற்று சம்பந்தப்பட்ட தொழிலாளர் ஆய்வர்களுக்கு அனுப்பி வைத்து முன் அனுமதி பெற்று பின்னர் அதன் நகலை நிறுவனத்தில் வைக்கப்பட வேண்டும்.
ஆய்வின் போது தாக்கல் செய்ய வேண்டும். விடுமுறை தினங்களில் பணிப்புரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது விடுமுறை தினத்திற்கு முன்னதாகவோ அல்லது பிறகோ மூன்று தினங்களுக்குள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
குடியரசு தினமான இன்று அனைத்து கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்தான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினர். தீர்மானமும் இயற்றப்பட்டது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த வித பணியிலும் ஈடுபடுத்த கூடாது. 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்த கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களை ‘Pencil Portal’ என்ற வலைதளத்திலும், கட்டணமில்லா தொலைபேசி எண் ‘1098’ என்ற எண்ணிலும், கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த புகார்களை 1800 4252 650 மற்றும் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார்கள் தெரிவிக்கலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.