

புது டெல்லி: 2025-26-க்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு நடைமுறையின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா விழா, நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு பிளாக்கில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித் துறை செயலர் துஹின் கண்டா பாண்டே, பொருளாதார விவகாரத் துறை செயலர் அஜய் சேத் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பட்ஜெட் ரகசியம் பாதுகாக்கப்பட, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிக்கும் அதிகாரிகளும் ஊழியர்களும் அறைக்குள் பூட்டப்படும் "லாக்-இன்" நடைமுறை தொடங்குவதற்கு முன் வழக்கமாக அல்வா விழா நடத்தப்படுகிறது.
அல்வா விழா என்பது நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் தயாரிப்புக் குழுவினர் லாக்-இன் பீரியட் என்றழைக்கப்படும் தனிமைப்படுத்திக் கொள்ளுதலுக்குச் செல்லும் முன்னர் அவர்களை வழியனுப்பும் விதமாக நடத்தப்படுகிறது. இந்த லாக்-இன் காலகட்டத்தில் அவர்கள் வடக்கு பிளாக்கின் தரைத்தளத்தில் வெளி நபர்களுடன் தொடர்பு இல்லாது அலுவல்களைச் செய்வார்கள். பட்ஜெட் இறுதி ஆவணத்தின் ரகசித்தை பேணும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. லாக்-இன் போது அதிகாரிகள் யாரும் செல்போன் உள்ளிட்ட எந்த உபகரணங்களையும் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் தான் அல்வா விழா நிதியமைச்சர் முன்னிலையில் நிறைவு பெற்றுள்ளது.
அல்வா விழாவின் ஒரு பகுதியாக, நிதியமைச்சர், பட்ஜெட் அச்சகத்திற்குச் சென்று அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தப்பிப் பிழைத்த அல்வா விழா: கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்னர் பட்ஜெட் தொடர்பாக பல்வேறு பழைய வழக்கங்கள் கைவிடப்பட்டன. பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தாக்கலாகும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதியே தாக்கல் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது. அதேபோல் பட்ஜெட் ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டது, மத்திய பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் எனத் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் பழக்கம் 2017 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. பாஜக அரசின் கீழ் பட்ஜ்டெ நடைமுறைகள் பழவும் வழக்கொழிந்தாலும் கூட வடக்கு பிளாக்கில் பட்ஜெட்டுக்கு முன்னர் அல்வா கிண்டும் சுவாரஸ்ய நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது.