

புதுடெல்லி: பசு கோமியத்தில் மருத்துவப் பண்புகள் இருப்பதாக கூறிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு கடும் எதிர்வினையை சந்தித்துள்ளார். அவற்றுக்கு அவர் பதிலடியும் கொடுத்துள்ளார்.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, ‘‘கோமூத்திரத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது” என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தக் கருத்து அறிவியலுக்குப் புறம்பானது என்றும், மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே இவை உதவும் என்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, “கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று காமகோடி விளக்கமும் அளித்திருந்தார்.
‘கோமிய மகத்துவம்’ - ஐஐடி இயக்குநரின் இந்தக் கருத்துகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, சோஹா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் போராசிரியர் காமகோடி திறமையான ஆய்வாளர் மற்றும் கல்வியாளர். பசு கோமியத்தின் நன்மைகளின் பண்புகளை விளக்கும் பல அறிவியல் பூர்வமான ஆதாரங்களை அவர் வழங்கியுள்ளார். தற்கால நவீன அறிவியல் நமது பாராம்பரியத்தின் நுண்ணறிவுகள் அதிக அளவில் அங்கீகரத்து வருகிறது. ஆனால், எந்த விதமான அறிவியல் அடிப்படையும் இல்லாமல் இணையதளங்களில் இருக்கும் குப்பை கும்பல்கள், தங்களுடைய தவறான எண்ணங்களால் வெறுமனே திசைதிருப்பும் வேலைகளைச் செய்கிறார்கள். உறுதியுடன் இருங்கள் போராசிரியர் காமகோடி. இந்தக் கும்பலின் தாக்குதலுக்கெல்லாம் அடிபணியாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
‘பூமர் அங்கிள்’ ஸ்ரீதர் வேம்புவின் இந்த ஆதரவு கருத்து சமூக ஊடங்களில் கடும் எதிர்ப்பினையும், விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, லிவர் டாக்டர் என்ற பெயரில் அறியப்படும் டாக்டர் க்ரியாக் அப்பே பிலிப்ஸ், ஸ்ரீதர் வேம்புவை ‘படிப்பறிவில்லாத பூமர் அங்கிள்’ என்று அழைத்துள்ளார். மேலும், “இன்னும் எத்தனை காலத்துக்குதான் உங்களைப் பின்பற்றுபவர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி, முட்டாள் தனத்தைப் பரப்பி உங்களை நீங்களே மூட்டாள் ஆக்குவீர்கள். செல்வாக்கு மிக்க ஒருவராக பேராசிரியர் காமகோடியிடம் இருந்து தவறான தகவல்கள் பரவுவதை விட, நாம் முன்னேற உதவும் அறிவியல் கருத்துகளை பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்வினை: பிலிப்ஸின் பதிவுக்கு காட்டமாக எதிர்வினையாற்றியுள்ள ஸ்ரீதர் வேம்பு, அவரை ‘இடது தாராளவாதிகள்’ என்று அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்த பதிவில், "நமது நாட்டின் இடது தாராளவாதக் கூட்டம், இந்தியாவின் பாரம்பரிய அறிவை அழிக்க நினைத்து, அறிவியலை நம்புங்கள் என்ற முழக்கத்தைத் திணிக்க முயல்கின்றன. அந்த முழக்கம் மேற்கத்திய நாடுகளின் இறுதிக்கோட்பாடாக மாறியது.
கரோனா பேரழிவு, அந்தப் பிடிவாதமான மனப்பான்மையை கேலி செய்கின்றன. அடிப்படையில் இது கடினமான போராட்டாமாக இருந்தபோதிலும் துணிச்சலுடன் போராடிய ஆர்எஃப்கே ஜூனியரை நியாப்படுத்துகின்றன. இடது தாராளவாதம் ஓர் இறுக்கமான பிடிவாதமாக மாறிவிட்டது என உணரும் வரை ஆர்கேஎஃப் ஜூனியரும் அரசியல் ரீதியாக இடது தாராளவாதியாகவே இருந்தார். மருத்துவ அறிவியலில் சிறந்தப் பணிவுதான் நமக்கான தற்போதைய தேவை. அறிவியல் ஒருபோதும் ஆணவத்துடன் ஒன்று கலப்பதில்லை. அறிவியல் நமக்கு முழுமையான உறுதியினை வழங்குவதில்லை" என்று ஸ்ரீதர் வேம்பு சாடியுள்ளார்.