

உலகரங்கில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்து வருகிறது என தொழிலதிபர் ராஜன் பாரதி மிட்டல் கூறியுள்ளார்.
உலக பொருளாதார கூட்டமைப்பின் கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பார்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜன் பார்தி மிட்டல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்துக்கு நான் பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறேன். உலகளவில் இந்தியாவின் கவுரவம் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக உயர்ந்து வருகிறது. அதில் சந்தேகம் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தற்போதைய அரசு உதவி வருகிறது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் உற்பத்தி துறை மிகப் பெரிய ஊக்கம் பெற்றுள்ளது. அதனால் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தெளிவாக உள்ளார். குறைவாக இருந்த உற்பத்தி தற்போது அதிகரித்து வருகிறது. மின் வாகனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் நாம் 46 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய முதலீடு பெற்றுள்ளோம். பல துறைகளில் இன்னும் அதிகளவில் அந்நிய முதலீடு வரும்.
நமது வளர்ச்சிக்கு கட்டமைப்பு மிக முக்கிம். இதற்காக அரசு மற்றும் தனிார் துறைகளில் இருந்து அதிகளவில் முதலீடு செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் தொலைதொடர்பு துறை தொடர்பான வரிகள் குறைக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல துறைகளின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் இந்தியா மிக முக்கியமானதாக உள்ளது. அதனால் தொலை தொடர்பு வரிகள் குறைக்கப்பட வேண்டும். நாட்டில் நுகர்வும் அதிகரிக்க வேண்டும். மக்கள் கையில் அதிக பணம் இருக்க வேண்டும். அதற்கு பட்ஜெட்டில் வரி தள்ளுபடிகளை எதிர்பார்க்கிறோம்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு வலுவாக உள்ளது. பொருளாதரம், அரசியல் ரீதியான உறவுகளை இரு நாடுகளும் கொண்டுள்ளன. மீண்டும் அதிபர் ட்ரம்ப் தலைமை, இந்தியாவில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு ராஜன் பார்தி மிட்டல் கூறினார்.