

சென்னை: பொங்கலுக்கு வெளியூர் சென்ற பலரும் விமானத்தில் சென்னை திரும்புவதால், விமான கட்டணம் உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காத நிலையில், பலரும் விமான பயணத்துக்கு முன்பதிவு செய்வதால், விமான கட்டணம் அதிகரித்துள்ளது. மதுரை - சென்னை ரூ.10,046 முதல் ரூ.17,991, திருச்சி - சென்னை ரூ.6,049 முதல் ரூ.11,089, கோவை - சென்னை ரூ.5,552 முதல் ரூ.11,089, தூத்துக்குடி - சென்னை ரூ.10,750 முதல் ரூ.17,365, சேலம் - சென்னை ரூ.10,441 ஆக கட்டணம் உள்ளது.
ஆனால், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. சென்னை - மதுரை ரூ.3,975 முதல் ரூ.4,947, சென்னை - திருச்சி ரூ.4,862 முதல் ரூ.5,282, சென்னை - கோவை ரூ.3,260 முதல் ரூ.6,492, சென்னை - தூத்துக்குடி ரூ.5,071 முதல் ரூ.5,281, சென்னை - சேலம் ரூ.4,862 ஆக உள்ளது. சென்னை செல்லும் விமானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கேட்டபோது, விமான நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பயணிகள் இல்லாமல், பல விமானங்கள் காலியாக இயக்கப்படுகின்றன. ஆனால், அங்கிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில், கூட்டம் அதிகம் இருப்பதால், குறைந்த கட்டண டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கெனவே முடிந்துவிட்டன.
அதிக கட்டண டிக்கெட்கள் மட்டுமே உள்ளதால், அந்த கட்டணத்தை வசூலிக்கிறோம். இதனால், கூடுதல் கட்டணம் வசூலிப்பதுபோல தெரிகிறது. கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து பயணிப்பதால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. விமான பயணத்தை திட்டமிட்டு 2 மாதங்களுக்கு முன்பு பயணிகள் முன்பதிவு செய்தால், குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெளியூர்களில் இருந்து அதிக அளவிலான பயணிகள் விமானங்களில் வருவதால், சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.