

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் விலை ரூ.58 ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பணப்பயிராக தென்னை, மற்றும் ரப்பர் விவசாயம் உள்ளது. தென்னையில் ஏற்பட்டுள்ள கேரள வாடல் நோய், மற்றும் தேங்காய் விலை வீழ்ச்சி ஆகியவற்றாலும், தென்னை தோட்டம் பராமரிப்புக்கான செலவு அதிகரித்ததாலும் தென்னை விவசாயத்தில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் விலகி வந்தனர். இதனால் தென்னை விவசாயத்தின் பரப்பளவும் குறைந்து வந்தது.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக பொள்ளாச்சி, ஈரோடு, மதுரை, தென்காசி உட்பட தென்னை விவசாயம் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்துக்கு தேங்காய் வரத்து இல்லை. உள்ளூர் தென்னை மரத்திலும் குறைவான மகசூல் இருந்ததால் குமரி மாவட்டத்தில் தேங்காய்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் தென்னை கொள்முதல் விலை 40 ரூபாயில் இருந்து அதிகரித்தவாறு இருந்தது.
சபரிமலை சீஸன், பொங்கல் உட்பட பண்டிகை காலங்களும் வந்ததால் தேவைக்கு தேங்காய் கிடைக்காததால் விலை ஏற்றம் அடைந்தது. பொங்கலில் இருந்து விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கிலோ ரூ.58-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. வியாபாரிகள் கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்கின்றனர். தேங்காய் விலை கடந்த ஆண்டு இருந்ததை விட இரட்டிப்பாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டிகை முடிந்தாலும் தேங்காய் அதிகம் இல்லாததால் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னை விவசாயத்தில் மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது.