தமிழக அளவில் சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சி 3-ம் இடம்! 

தமிழக அளவில் சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சி 3-ம் இடம்! 
Updated on
2 min read

மதுரை: தமிழக அளவில் சொத்து வரி வசூலில், மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம்பிடித்துள்ளது. ஒவ்வொரு அரையாண்டிற்கும் நினைவூட்டல் நடைமுறை அறிமுகப்புடுத்தப்பட்டு, தற்போது முதல் முறையாக மாநகராட்சி வரலாற்றில் சொத்து வரி செலுத்துவதற்காக 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டிடங்களுக்கு மாநகராட்சி ஒவ்வொரு அரையாண்டிற்கு ஒரு முறையும் சொத்து வரி வசூல் செய்கிறது. சொத்து வரி மூலம் ஆண்டிற்கு மாநகராட்சிக்கு ரூ.247 கோடி வருவாய் கிடைக்கிறது. தமிழக அளவில் சென்னை, கோவைக்கு அடுத்து மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. கோவை, சென்னையில் ஏராளமான தொழிற்பேட்டைகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளதால் அவர்களுக்கு சொத்துவரி அதிகளவு கிடைக்கிறது.

தற்போதுதான் மதுரை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு, விமானம் நிலையம் வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கம் இறுதியான பிறகு ஓரளவு மதுரை மாநகராட்சியில் இன்னும் சொத்து வரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த கோரி முதல் முறையாக 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் 'நோட்டீஸ்' அனுப்புவது மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாக உள்ளது.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''முதல் அரையாண்டு வரியை ஏப்-15ம் தேதிக்குள் கட்ட வேண்டும். இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும். முன்பு, வரி நீண்ட நாட்கள் கட்டாதவர்களுக்கு மட்டுமே 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அதனால், முறையாக வரி கட்டாதவர்கள் கூட, நினைவூட்டல் இல்லாமல் அவர்களும் வரி கட்டுவதற்கு தாமதம் செய்கிறார்கள். மாநகராட்சி சொத்து வரி வசூல் பாதிக்கப்பட்டு வருவாய் குறைகிறது. 'நோட்டீஸ்' அனுப்புவது, என்பது கேட்பு அறிவிப்புதான். 'நோட்டீஸ்' அனுப்புவதே வரியை கட்ட சொல்லி ஒரு நினைவுப்படுத்தும் நடவடிக்கைதான்.

மின்வார வாரியத்தில் மின்கட்டணம் செலுத்த கோரி, 2 மாதத்திற்கு ஒரு முறை, மின்கட்டண தொகையை குறிப்பிட்டு கட்ட சொல்லி நினைவூட்டல் தகவல் மின்நுகர்வோர்களுக்கு எஸ்எம்எஸ் அவர்களுடைய செல்போன்களுக்கு அனுப்பப்படும். அதுபோலவே, தற்போது வரிகட்டாதவர்கள், கட்டியவர்கள் அனைவருக்குமே நினைவூட்டல் அடிப்படையில் 'நோட்டீஸ்' அனுப்பும் நடைமுறை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் நீண்ட காலம் கட்டாமல் இருப்பவர்கள் மீது 'நோட்டீஸ்' வழங்கிய அடுத்த 15 நாட்களில், நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டப் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுடைய சொத்துகளை ஜப்தி செய்யவும் இந்த சட்டத்தில் இடம் உள்ளது. நிறைய பேருக்கு தாங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும், எவ்வளவு பாக்கியிருக்கிறது என்பது கூட தெரியாது.

அந்த அடிப்டையிலும் நாங்கள் அனுப்பும் 'நோட்டீஸ்' அவர்களுக்கு நினைவூட்டல் செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும், அனைத்து கட்டிடங்களுக்கும் பில்கலெக்டர்கள் 'நோட்டீஸ்' வழங்கும்போது, சொத்து வரி செலுத்தும் மக்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்த முடியும். பில்கலெக்டர்களுக்கும் யார், யார் வரி செலுத்தாமல் உள்ளார்களா என்ற விவரமும் தனிப்பட்ட முறையில் தெரிய வாய்ப்புள்ளது.

அந்த அடிப்படையில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு நோட்டீஸ் அச்சடித்து வழங்க மாநகராட்சிக்கு சில லட்சங்கள் மட்டுமே செலவாகும். ஆனால், இந்த 'நோட்டீஸ்' வழங்குவதால் மாநகராட்சிக்கு வரிவசூலில் 200 மடங்கு லாபம் கிடைக்கிறது. இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கையாலே சொத்து வரி வசூலில் தமிழக அளவில் மாநகராட்சி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி முதலிடத்திலும், திருச்சி இரண்டாம் இடத்திலும் உள்ளது,'' என்றார்.

சொத்து வரி கட்டாவிட்டால் 1 சதவீதம் வட்டி: கடந்த காலத்தில் சொத்து வரியை தாமதமாக கட்டினாலும் அவர்களிடம் அபராதமோ? வட்டியோ? வசூல் செய்யப்படாது. தற்போது ஒரு அரையாண்டு வரியை நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் கட்டாவிட்டால் அரசாணைபடி அவர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரிக்கு ஒரு சதவீதம் வட்டி வசூல் செய்யப்படுகிறது.

இந்த ஒரு சதவீதம் வட்டி, அடுத்த அரையாண்டில் தானாகவே கட்டிட உரிமையாளர் கணக்கில் ஏறிவிடும். நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி, யாரும் தற்போது சொத்து வரி செலுத்தாமல் இருக்க முடியாது. வரி கட்டுவதற்கு தடையானை பெற்றிருப்பவர்களிடம் மட்டுமே சொத்து வரி வசூல் செய்யப்படாது. வழக்கு தொடுத்ததையும், நிலுவையில் உள்ளதையும் காரணம் காட்டி வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு அரையாண்டிற்கு செலுத்தாமல் இருக்கும் சொத்து வரிக்கு ஏற்ப ஒரு சதவீதம் வட்டி உயர்ந்து கொண்டே இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in