

புதுடெல்லி: செல்போனில் புதிய செயலியை பதிவிறக்கும் செய்தும், செட்டிங்கை மாற்றியும் வங்கி கையிருப்பை காலி செய்யும் புது மோசடி நடைபெறுவது குறித்து ஜெரோதா நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கி கையிருப்பை காலி செய்யும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த மோசடி சம்பவங்கள் புதுப்புது முறைகளில் அரங்கேறி வருகின்றனர். அதுபோன்ற புது மோசடி குறித்த வீடியோ ஒன்றை ஜெரோதோ என்ற ஆன்லைன் பங்குச் சந்தை வர்த்தக நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மோசடி நபர்கள் எவ்வாறு செயல்பட்டு அப்பாவிகளின் வங்கி பணத்தை சுரண்டுகின்றனர் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், அவசர அழைப்புக்காக ஒருவரிடம் அவரது செல்போனை கேட்கிறார். போன் அழைப்புக்கு தற்போது தனியாக கட்டணம் வசூலிக்கப்படாததால், பலர் தங்கள் செல்போன்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் அளிக்கின்றனர்.
அறிமுகம் இல்லாத நபர் செல்போனை வாங்கியதும் போன் எண்ணை டயல் செய்வது போல், செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்கிறார் அல்லது ஏற்கெனவே உள்ள செயலியை திறந்து பார்க்கிறார் அல்லது போன் செட்டிங்கை உடனடியாக மாற்றிவிடுகிறார். இதன் பின் அந்த செல்போனுக்கு வரும் அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ் தகவல்கள் வேறு எண் கொண்ட செல்போனுக்கு செல்கிறது. தனிப்பட்ட தகவல்களும் திருடப்படுகின்றன. வங்கியிலிருந்து வரும் ஓடிபி எண்களும் மோசடி நபர்களின் செல்போனுக்கு சென்று விடும். அதன்பின் செல்போனை கொடுத்த அப்பாவி நபர்களின் வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு பணம் முழுவதும் காலியாகிவிடும்.
இதனால் அறிமுகம் இல்லாத நபர்கள் யாராவது அவசர அழைப்புக்காக செல்போனை கேட்டால், அவரிடம் போன் எண்ணை கேட்டு நீங்களே டயல் செய்து ஸ்பீக்கரை ஆன் செய்து அந்த நபரை பேசவைப்பது பாதுகாப்பானது. இந்த விழிப்புணர்வு வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதில் இருந்து இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மாநில மொழிகளில் இத்தகவலை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் எனவும் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.