

சென்னை: தங்கம் விலை இன்று (ஜன.16) மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்தது. இது நகை வாங்கும் சாமானியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது (அக்டோபர் மாதம்) அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச. 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது.
பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.16) தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,390-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.59,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையாகிறது.
பண்டிகை காலம், டாலர் மதிப்பு உயர்வு, அமெரிக்க அதிபர் பதவியேற்பு நெருங்குவது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடைசியாக கடந்த அக்டோபரில் தங்கம் விலை பவுன் ரூ.59,640-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்த நிலையில் மீண்டும் அதையே நோக்கி தங்கம் விலை நகர்கிறது. அந்த வகையில் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.59,120-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், தை, மாசி மாதங்கள் தமிழகத்தில் திருமணம், புதுமனை புகுதல் உள்ளிட்ட வைபவங்களுக்கான சுபமுகூர்த்த நாட்கள் நிறைந்த மாதங்கள் என்பதால் ஒரு பவுன் தங்கம் ரூ.60,000 என்ற புதிய உச்சத்தைக் கூட எட்டலாம் என்று நகை வணிகர்கள் கணிக்கின்றனர்.