Published : 14 Aug 2014 11:17 AM
Last Updated : 14 Aug 2014 11:17 AM

செலவு நிர்வாகக் குழுவின் தலைவர் பிமல் ஜலான்

அரசின் செலவு நிர்வாகக் குழுத் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உணவு, உரம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு அரசு அளிக்கும் மானியத்தைக் குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை அளிப்பார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் செலவு நிர்வாகக் குழு (இஎம்சி) அமைக்கப்படும் என அறிவித்தார். இதனடிப்படையில் அரசு செலவு நிர்வாகக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு அரசின் செலவினங்களை ஆராய்ந்து அதில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு அளிக்கும் என்று ஜலான் தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீடுகள் மற்றும் அவை உரிய வகையில் செலவிடப்படுகின்றனவா என்பதை ஆராய்வதன் மூலம் அரசின் செலவு உரிய இலக்கை எட்டும் என்றும் ஜலான் குறிப்பிட்டார். அரசு மானியம் குறித்து ஒட்டுமொத்தமாக பரிசீலிக்க வேண்டும் என்றும், குறிப்பாக உணவு மற்றும் பெட்ரோலிய பொருள்களுக்கு வழங்கப்படும் மானியத்தை பரிசீலிக்க வேண்டும் என்றும் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதேசமயம் அரசின் உதவிகள் ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களைச் சென்றடைய வேண்டியது அவசியம் என்றும் புதிய யூரியா கொள்கை வகுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உணவு, பெட்ரோலியம், உரத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகை 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ. 2,51,397 கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.47 சதவீதம் அதிகமாகும். உரத்துக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டதால் மானிய அளவு அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x