Published : 09 Aug 2014 10:00 AM
Last Updated : 09 Aug 2014 10:00 AM

தொழில் துறையில் களமிறங்கும் அம்பானி பேரன்கள்

தொழில்துறையினரின் வாரிசுகள் நிர்வாகத்தில் இறங்குவது புதிதல்ல. இருப்பினும் அவர்கள் எப்போது ஈடுபடுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டேயிருக்கும். இந்தியாவின் முன்னணி தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் பேரன்கள் இருவர் இப்போது தொழில் துறையில் தடம் பதித்துள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, தந்தைக்கு உதவியாக தொலைத் தொடர்பு நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கியுள்ளார். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மிகவும் கால தாமதமாக தொலைத் தொடர்புத் துறையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்பானியின் மற்றொரு மகனான அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோலும் ரிலையன்ஸ் கேபிடல் நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கியுள்ளார். தங்களின் தாத்தா ஆரம்பித்த சாம்ராஜ்யத்தை மேலும் விரிவுபடுத்த தங்களது 22-வது வயதிலேயே இருவரும் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரவுன் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் படித்தவர் ஆகாஷ். 2011-ம் ஆண்டு தனது தந்தையுடன் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பிஎல்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போது உடனிருந்தார். இப்போது ரிலையன்ஸ் ஜியோவின் 4-ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்றுள்ளார்.

ஜெய் அன்மோல், இங்கிலாந்தின் வார்விக் வணிகவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். நிதித்துறையில் மிகுந்த ஈடுபாடு இருப்பதால் ரிலையன்ஸ் கேபிடல் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். சமீபத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ஜேபி நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ குழு மங்கள் இந்நிறுவனத்தை வாங்க போட்டியிட்ட போதிலும் அதை வெற்றிகரமாக நிகழ்த்தியதில் ஜெய் அன்மோலுக்கும் பங்குண்டு.

இவரை மிகச் சிறந்த தொழிலதிபராக்கும் பணியை ரிலையன்ஸ் கேபிடல் தலைமைச் செயல் அதிகாரி சாம் கோஷ் ஏற்றுள்ளதாக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் மகன் கரண் இப்போது தந்தைக்கு உதவியாக களமிறங்கியுள்ளார்.முந்த்ரா துறைமுகத்தை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் பணியில் அவர் இறங்கியுள்ளார். இதேபோல சுஸ்லான் குழுமத்தின் தலைவர் துளசி டான்டி-யின் மகன் பிரணவ் தந்தைக்கு உதவியாக நிதி நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கியுள்ளார்.

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் இப்போது துபையிலிருந்தபடியே நிறுவனத்தின் கனிம வர்த்தகத்தைக் கவனிக்கிறார். அவரது மகள் பிரியா, கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத செயல் இயக்குநராக உள்ளார். ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்காவின் மகன் அனந்த் கோயங்கா இப்போது சியெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை நடத்தும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷிணி தந்தைக்கு உதவியாக களமிறங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x