

புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெக்தீப் சிங் என்ற தொழி்ல்நுட்ப நிறுவனர் நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி சம்பாதிப்பது உலகளவில் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது.
பிரபல மின்வாகன (இவி) பேட்டரி நிறுவனமான குவாண்டம்ஸ்கேப் நிறுவனர் ஜெக்தீப் சிங். இவருடைய ஒரு நாள் வருமானம் ரூ.48 கோடியாகும். இது பல முன்னணி நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தை விட அதிகமான தொகையாகும்.
அதன்படி, பங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் உட்பட ஓராண்டுக்கு அவருக்கு கிடைக்கும் சம்பளம் மட்டும் 2.3 பில்லியன் டாலராகும். அதாவது இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெக்தீப் சிங் பிடெக் பட்டத்தை ஸ்டார்ன்போர்டு பல்கலையிலும், எம்பிஏ படிப்பை கலிபோர்னியா பல்கலையிலும் முடித்தவர். முதன்முதலாக எச்பி நிறுவனத்தில் சேரந்த அவர் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். பின்பு அவர் பல ஸ்டார்அப் நிறுவனங்களை அவர் தொடங்கினார். இதில் கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர்சாஃப்ட் நிறுவனம் முக்கியமானது.
பல நிறுவனங்களின் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தை சிங் தொடங்கினார். பேட்டரி டெக்னாலஜியில் புதுமையான மற்றும் திருப்புமுனையான கண்டுபிடிப்புகளி்ல் இவரது நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.