

புதுடெல்லி: ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ ஆகிய விமானங்களில் வை-பை இணையதள சேவை வழங்கப்படுகிறது. இதன்மூலம் உள்நாட்டு விமானங்களில் முதல்முறையாக இணையதள சேவையை வழங்கும் நிறுவனம் என்ற பெருமை ஏர் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
விமானம் 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பறக்கும்போது பயணிகள் தங்கள் லேப்டாப்கள், டேப்லட்கள், ஸ்மார்ட்போன்களில் இந்த வை-பை இணையதள சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் லேப்டாப், ஸ்மார்ட்போன் என ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன வாடிக்கையாளர் அனுபவ பிரிவு தலைமை அதிகாரி ராஜேஷ் டோக்ரா கூறும்போது, “இணையதள இணைப்பு இப்போது நவீன பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகி உள்ளது. சிலர் பொழுதுபோக்குக்காக இணையத்தை பயன்படுத்துவார்கள். சிலர் அலுவலக பணிகளுக்காக பயன்படுத்துவார்கள். நோக்கம் எதுவாக இருந்தாலும், இந்த இணைய வசதியை எங்கள் விருந்தினர்கள் பாராட்டுவார்கள். அத்துடன் புதிய அனுபவத்தை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.