தனியார் வங்கிகளில் பணி விலகல் விகிதம் அதிகம்: ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்
தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது அதிகமாக உள்ளது என ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: பரவலாக தனியார் துறை வங்கிகள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் (எஸ்எப்பி) பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலையிலிருந்து விலகுவது அதிகரித்து வருகிறது. இதனால், வங்கியின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2023-24-ம் நிதியாண்டில் தனியார் துறை வங்கிகளில் வேலையை விட்டு செல்வோர் விகிதம் பொதுத் துறை வங்கிகளை காட்டிலும் அதிகரித்தது. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வேலையிலிருந்து விலகுவோர் விகிதம் சராசரியாக 25 சதவீதம் என்ற அதிகபட்ச அளவில் உள்ளது. இது, வங்கி செயல்பாட்டு அபாயங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நிறுவனம் சார்ந்த அறிவு இழப்பு ஏற்படுவதுடன் ஆட்சேர்ப்பு செலவுகளையும் வங்கிகளுக்கு அதிகரிக்கிறது. மேலும், வாடிக்கையாளர் சேவைகளில் சீர்குலைவு ஏற்படவும் இது வழிவகுக்கிறது.
எனவே, பணியாளர்கள் விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனியார் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது, ஒரு மனித வளச் செயல்முறை மட்டுமல்ல நிறுவனத்தின் வளர்சிக்கு உதவும் இலக்குகளுக்கும் தேவையானதாகும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
