

கோவை: “உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி முயற்சிகளை விரைவுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்” என்று ராணுவத்துறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் தெரிவித்தார்.
கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் (சிடிஐஐசி) சார்பில் ராணுவம் சார்ந்த தொழில்களுக்கான கூட்டம் கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகத்தில் இன்று (டிச.27) நடந்தது. ராணுவத் தளவாட தொழிலில் முக்கிய பங்கு வசிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ராணுவ புத்தாக்க நிறுவனம், ராணுவம் மற்றும் ராணுவம் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
கொடிசியா தொழில் அமைப்பின் தலைவர் மற்றும் ‘சிடிஐஐசி’ இயக்குநர் கார்த்திகேயன், கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் தொடக்கம் முதல் தற்போது வரை ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய செயல்பாடுகளை எடுத்துரைத்தார். ‘சிடிஐஐசி’ இயக்குநர் சுந்தரம் ராணுவ புத்தாக்க தொழில் முயற்சிகளில், ‘சிடிஐஐசி-ன்’ குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அரசின் ராணுவத்துறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் பேசும் போது, “உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம். இத்தகைய முயற்சிகளுக்கு ராணுவ புத்தாக்க மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உள்நாட்டு தளவாட உற்பத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பது போன்ற பணிகளை செய்வதன் மூலம் இந்திய நாடு ஒரு சுயசார்புடையதாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். அத்தகைய நடவடிக்கை மேற்கொண்டு வரும் ‘கொடிசியா’ தொழில் அமைப்பின் நடவடிக்கை பாராட்டுக்குரியது,” என்றார்.
ராணுவத் தொழில்துறைச் சார்ந்து சாதனைகள் புரிந்த இளம் புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கொடிசியா உறுப்பினராக உள்ள தொழிற்சாலைகளின் புதிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே தயாரித்த உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள ‘சிடிஐஐசி’ மையத்தில் வழங்கும் சேவைகள் மற்றும் வசதிகளை இந்திய அரசின் ராணுவத்துறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் பார்வையிட்டார்.