டிடிஎஸ் பிடித்தம் முறை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு!
புதுடெல்லி: சம்பளத்தில் வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படுவதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், வழக்கறிஞர் அஸ்வானி துபே மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ‘அரசியல் சாசன சட்ட விதிமுறைகளின் படி வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) முறை நியாயமற்றது, விவேகமற்றது.
பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களை கருத்தில் கொண்டு வரிப்பிடித்தம் முறையில் தேவையான மாற்றங்களை நிதி ஆயோக் பரிந்துரைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வரிப் பிடித்தம் முறையின் சட்டப்பூர்வ தன்மையை சட்ட ஆணையம் ஆராய்ந்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வரிப் பிடித்தம், வரி செலுத்துவோருக்கு நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. வரிப் பிடித்தம் சான்றிதழ் வழங்குவது, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது போன்றவற்றில் சிக்கலான விதிமுறைகள் உள்ளன. வரிப்பிடித்தம் முறைக்கு ஊழியர்கள் மற்றும் ஆடிட்டர்களை நியமிப்பதன் மூலம் நிறுவனங்களுக்கு கணிசமான செலவு ஏற்படுகிறது. இதற்கு இழப்பீடு ஏதும் வழங்கப்படுவதில்லை.
வரிப் பிடித்தம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சுமையாக இருக்கிறது. வரிப் பிடித்தம் முறை சம உரிமை மீறுவதாக உள்ளது. எனவே வரிப்பிடித்தம் முறையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளது.
