

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையும் இறங்குமுகமாகவே காணப்பட்டது.
வரவிருக்கும் ஆண்டில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் முன்னறிவிப்பு செய்துள்ளது. அதன் நீட்சியாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியே எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சந்தை மந்த நிலையில் இருந்து வருவதாக சந்தை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,176.45 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,041.59 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 364.20 புள்ளிகள் சரிந்து 23,587.50 புள்ளிகளில் நிலைபெற்றது. பங்குச் சந்தை குறியீடுகள் வார அளவில் 5 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் 3.5 சதவீதம் என்ற அளவில் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா, டிசிஎஸ், எல் அண்ட் டி பங்குகள் மிகவும் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், மாருதி பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு காணப்பட்டது.
அந்நிய முதலீட்டாளர்கள் இந்த வாரத்தில் மட்டும் ரூ.12,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.