பங்குச் சந்தையில் ரூ.3 லட்சம் கோடி திரட்டிய நிறுவனங்கள்

பங்குச் சந்தையில் ரூ.3 லட்சம் கோடி திரட்டிய நிறுவனங்கள்
Updated on
1 min read

நடப்பாண்டில் இதுவரையில் பங்குச் சந்தையிலிருந்து ரூ.3 லட்சம் கோடியை இந்திய நிறுவனங்கள் திரட்டிக் கொண்டுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத உச்ச அளவாகும்.

ஐபிஓ, கியூஐபி, உரிமை பங்கு வெளியீடு உள்ளிட்டவற்றின் மூலமாக இந்திய நிறுவனங்கள் நடப்பாண்டில் இதுவரையில் பங்குச் சந்தையிலிருந்து ரூ.3 லட்சம் கோடி மூலதனத்தை திரட்டியுள்ளன. 2021-ல் திரட்டபட்ட ரூ.1.88 லட்சம் கோடியே அதிகபட்ச அளவாக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

90 நிறுவனங்கள் ரூ.1.62 லட்சம் கோடியை இதுவரையில் திரட்டியுள்ளன. இது கடந்தாண்டின் அளவான ரூ.49,436 கோடியுடன் ஒப்பிடும்போது 2.2 மடங்கு அதிகமாகும். நடப்பாண்டில் புதிய வெளியீடு மூலமாக ரூ.70,000 கோடியை நிறுவனங்கள் திரட்டியுள்ளன. இது, 2021-ல் ரூ.43,300 கோடியாக இருந்தது.

கியூஐபி மூலமாக 88 நிறுவனங்கள் ரூ.1.3 லட்சம் கோடி மூலதனத்தை பெற்றுள்ளன. இதற்கு முன்பு, 2020-ல் 25 நிறுவனங்கள் ரூ.80,816 கோடியை திரட்டியதே அதிகபட்ச அளவாக கருதப்பட்டது.

அதேபோன்று, உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் 20 நிறுவனங்கள் திரட்டிய மூலதனம் ரூ.18,000 கோடியாக உள்ளது. இது கடந்தாண்டில் ரூ.7,266 கோடியாகவும், 2022-ல் ரூ.3,884 கோடியாகவும் இருந்தன.

இவ்வாண்டு முடிய இன்னும் இருவார காலம் எஞ்சியுள்ளதால் பங்குச் சந்தையிலிருந்து நிறுவனங்கள் திரட்டும் மூலதனம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in