

கோவை: மாறி வரும் காலத்துக்கு ஏற்ப குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். என, இந்திய அரசின் எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் உறுப்பினர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய சங்கத்தின்(வாஸ்மி) இயக்க செயலாளர் சஞ்சிவ் லாயக் தெரிவித்தார்.
இந்திய அரசின் எம்எஸ்எம்இ அமைச்சகம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய சங்கம்(வாஸ்மி), இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் ஆகியவை சார்பில் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்த பன்னாட்டு கருத்தரங்கு கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவாந்தா ஓட்டலில் வியாழக்கிழமை நடந்தது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய சங்கத்தின்(வாஸ்மி), தலைவர் ஜான்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.
காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்வில் பல்வேறு தலைப்புகளில் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து மாலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய சங்கத்தின்(வாஸ்மி) இயக்க செயலாளர் சஞ்சிவ் லாயக், தென்னிந்திய தலைவர் பத்மநாபன் ஆகியோர் கூறியதாவது: புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ‘மெஷின் லேர்னிங்’ போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை கரோனா நோய்தொற்று பரவல் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறையினருக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
அன்றைய சூழலில் மேற்குறிப்பிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திய தொழில்துறையினர் மட்டுமே நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள முடிந்தது. பல தொழில்முனைவோர் தொழிலை விட்டு காணாமல் போன நிலை ஏற்பட்டது. எனவே புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். எங்கள் அமைப்பு சார்பில் கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் இந்தியாவில் எம்எஸ்எம்இ பிரிவை சேர்ந்த 10 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களை உற்பத்திக்கு பயன்படுத்த உதவியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த், கெளரவ செயலாளர் பிரதீப், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் இளங்கோ ஆகியோர் கூறும் போது, கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ள கருத்தரங்கு மிகவும் உதவியது. எதிர்வரும் நாட்களில் எங்கள் தொழில் அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள தொழில்முனைவோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். என்றனர்.