எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டத்தால் ரூ.1 லட்சம் கோடி அந்நிய செலாவணி சேமிப்பு: மத்திய அரசு

குறியீட்டுப் படம்
குறியீட்டுப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் எத்தனால் கலக்கும் திட்டத்தின் விளைவாக 30.09.2024 நிலவரப்படி சுமார் ரூ.1,08,655 கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் சுரேஷ் கோபி, "கச்சா எண்ணெய் மீதான இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க அரசு ஒரு பலமுனை உத்தியைக் கடைப்பிடிக்கிறது. பொருளாதாரத்தில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரித்தல், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நகர்தல், எத்தனால் போன்ற புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிபொருள்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் எரிபொருள் / மூலப்பொருளாக இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் தேவைக்கு மாற்றானதாக இது இருக்கும். அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு மற்றும் உயிரி டீசல், மின்சார வாகன மின்னேற்றி நிலையங்கள் உள்கட்டமைப்பை உருவாக்குதல், சுத்திகரிப்பு செயல்முறை மேம்பாடுகள், எரிசக்தி திறன் மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல், பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, குறைந்த கட்டணத்துடனான போக்குவரத்து சேவையை நோக்கிய நிலையான மாற்று முன்முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்துதல், உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோல், டீசல் கிடைப்பதை உறுதி செய்ய அனைவருக்குமான சேவை கடமையை வலியுறுத்துதல், பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் எத்தனால் கலக்கும் திட்டத்தின் விளைவாக 30.09.2024 நிலவரப்படி சுமார் ரூ.1,08,655 கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை அடிப்படையிலான தீவனத்திலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் சர்க்கரை ஆலைகள் அதன் உபரி சர்க்கரை கையிருப்பைக் குறைக்கவும், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்க முன்கூட்டியே வருவாயை ஈட்டவும் உதவியது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.35,000 கோடிக்கு மேல் வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in