

நாமக்கல்: நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு மூலம் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பண்ணை கொள்முதல் விலை ஒரு முட்டை ஐந்து ரூபாய் 85 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் 5 பைசா உயர்த்தி. 5 ரூபாய் 90 பைசாவாக வரலாறு காணாத அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதனால். சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டை ரூ.6 முதல் ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது. முட்டை விலை உயர்வு நுகர்வோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது: தீவனப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளது. மேலும், பண்ணைகளில் கோழிக் குஞ்சு விடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமாக கார்த்திகை மாதம் ஐயப்ப சீஸன் என்பதால் முட்டை நுகர்வு குறையும். அப்போது விலையும் குறையும். ஆனால், தற்போது முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. பண்ணை கொள்முதல் விலை முட்டைக்கு 5 ரூபாய் 90 பைசா வாக உயர்ந்தாலும், உற்பத்திச் செலவு 5 ரூபாய் 40 பைசாவாக உள்ளது. முட்டை விலை உயர்ந்தாலும், மிகக் குறைந்த லாபமே கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறும்போது, “வட மாநிலங்களில் குளிர் அதிகமாக இருப்பதால், அங்கு முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் அளவும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
தமிழகம், கேரளாவில் குளிர் சீசன் நிலவுவதால், உள்ளூர் நுகர்வும் அதிகரித்துள்ளது. நுகர்வு அதிகரித்த நிலையில், முட்டை உற்பத்தி 5முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது, 50 லட்சம் முட்டைகள் குறைவாக உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, முட்டை விலை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது” என்றார்.