அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்து தர மதிப்பீட்டில் முன்னேற்றம் இருக்கும்: பிட்ச்

அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்து தர மதிப்பீட்டில் முன்னேற்றம் இருக்கும்: பிட்ச்
Updated on
1 min read

சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் இந்தியாவுக்கான ரேட்டிங்கில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. அதே சமயம் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்து தர மதிப்பீட்டில் ஏற்றம் இருக்கும் என்றும் பிட்ச் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான மதிப்பீட்டை பிபிபி- என்ற நிலையில் அது வைத்திருக்கிறது.

கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட் கிரெடிட் ரேட்டிங்குக்கு சாதகமாக இருந் தாலும், அரசு எடுக்கும் கடினமான முடிவுகளை பொறுத்தே தர மதிப்பீட்டில் ஏற்றம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் நடந்த மாநாட்டில் பிட்ச் இதனை தெரிவித்திருக்கிறது.

பிட்ச் தவிர்த்து மூடிஸ் நிறுவனமும் பிபிபி- என்றே இந்தியாவுக்கான மதிப்பீட்டை வைத்திருக்கிறது. கடந்த வருடம் ரூபாய் மதிப்பு சரிந்தது, நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது ஆகிய காரணங்களால் இந்தியாவுக்கான மதிப்பீட்டை குறைப்போம் என்று சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

மேலும் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்றும் 2016-ம் ஆண்டில் 6.5 சதவீதமாக ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்றும் பிட்ச் தெரிவித்தது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைப்போம் என்றும், 2017-ம் ஆண்டில் 3 சதவீதமாக குறைப்போம் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இது குறித்த பேசிய பிட்ச் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவுகளில் சிக்கனமும் இருக்கும் பட்சத்தில் இந்த இலக்கை அடைய முடியும் என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் சரக்கு மற்றும் சேவை வரியை அரசு எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதையும் அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு வேளை வருமானம் குறையும் பட்சத்தில் அரசு எப்படி சமாளிக்க போகிறது என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

நிதிப்பற்றாக்குறை இலக்கில் 56.1%

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் நிதிப்பற் றாக்குறை திட்டமிட்ட இலக்கில் 56% தொட்டுவிட்டது. அதாவது நிதிப்பற்றாக்குறை ரூ. 2.97 லட்சம் கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிதிப்பற்றாக்குறை 48.4 சதவீதமாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டுக்கு நிதிப் பற்றாக்குறை ரூ. 5.31 லட்சம் கோடியாக நிர்ண யிக்கப்பட்டது.

2013-14ம் நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இது 4.9 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் செலவுகளுக்கான திட்டமிட்ட தொகையில் 23 சதவீத தொகை முதல் காலாண்டில் செலவிடப் பட்டிருக்கிறது. அதாவது 4.13 லட்சம் கோடி ரூபாய். இதில் திட்டம் சாராத செலவுகள் 3.01 லட்சம் கோடி ரூபாய்.

வருமானம் ரூ.1.14 லட்சம் கோடியாக இருக்கிறது. திட்ட மிட்ட இலக்கில் 9.6 சதவீதம் வந்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in