Published : 26 Jun 2018 09:01 am

Updated : 26 Jun 2018 09:01 am

 

Published : 26 Jun 2018 09:01 AM
Last Updated : 26 Jun 2018 09:01 AM

ஆன்லைன் ராஜா 32: சுமைதாங்கி சாய்ந்தால்....

32

ஜா


க் மாவும் பயந்தார். ஆனால், அதே சமயம், இரவு என்று ஒன்று வந்தால், சீக்கிரமே கீழ்வானம் சிவக்கும் என்னும் ஆக்கபூர்வ நம்பிக்கை. அதனால்தான், ஷாம்பேன் வாங் கிக் கொண்டாடப்போவதாகச் சொன்னார்.

சகாக்களிடம் அதிர்ச்சி.

“என்ன, என்ன?”

“ஆமாம். நாஸ்டாக் பங்குச் சந்தைச் சரிவு அதிர்ச்சி தரும் சேதிதான் ஆனால், தற்காலிகமானது. சந்தைக்கு இது ஆரோக்கியம் தரும்.”

“எப்படி?”

“உண்மையான பலம் கொண்ட நிறுவனங்கள் அதிக சக்தியோடு மீண்டுவருவார்கள். திட்டமே இல்லாமல் பிசினஸுக்கு வந்தவர்களும், ஏமாற்றுக்காரர்களும் காணாமல் போவார்கள்.”

``அலிபாபாவுக்கு என்ன பாதிப்பு வரும்?“

“நாம் திட்டமிட்டதுபோல் இந்த வருடம் ஐபிஓ செய்யமுடியாது. நிலைமை சீராகும்வரை தள்ளிப்போட வேண்டும்.”

“எவ்வளவு நாட்கள் தள்ளிப்போட வேண்டும்?”

“குறைந்த பட்சம் ஓரிரு வருடங்கள்.”

“நம் வளர்ச்சி பாதிக்கப்படாதா?”

``பாதிக்கப்படும். ஆனால், நம் போட்டியாளர்கள் நம்மைவிட அதிகமாகச் சிரமப்படு வார்கள்.”

“ஏன்?”

“கோல்ட்மேன் ஸாக்ஸ் தந்த 5 லட்சம் டாலர்களை மட்டுமே நாம் செலவிட்டிருக்கிறோம். சாஃப்ட் பேங்க் தந்த 20 லட்சம் முழுக்கப் பத்திரமாக இருக்கிறது. நம் போட்டியாளர்களான பிற சீன ஆன்லைன் கம்பெனிகளிடம் இத்தனை நிதிவசதி இல்லை. துணிகர முதலீட்டாளர்கள் இன்டர்நெட் கம்பெனிகளில் பணம் போடுவதை நிறுத்திவிட்டார்கள்.

குறைந்த பட்சம் அடுத்த மூன்று வருடங்களுக்கு நம் போட்டியாளர்களுக்குப் பணத் தட்டுப்பாடுதான். நம் கார் டேங்கில் பெட்ரோல் ஃபுல். இந்த மூன்று வருடங்களில் நாம் சுலபமாக அவர்களை முந்திவிடுவோம். ஆகவே, இந்தக் குமிழி வெடிப்பு நமக்கு நல்ல செய்தி.”

வாஷிங்டன் இர்விங் (Washington Irving) என்னும் அமெரிக்க எழுத்தாளர். ரிப் வான் விங்கிள் (Rip Van Winkle) என்னும் இவர் கதையை நீங்கள் படித்திருக்கலாம். இந்த மேதையின் வைர வரிகள் – சாதாரண மனிதர்கள் துரதிர்ஷ்டம் வரும்போது நொறுங்கிப்போகிறார்கள். மாமனிதர்கள் அதை வென்று உயர்கிறார்கள்.

வாஷிங்டன் இர்விங்கின் வரிகளுக்கு ஜாக் மா வாழும் உதாரணம். இன்டர்நெட் குமிழி வெடிப்பிலிருந்து அலிபாபா என்ன பாடங்கள் கற்கலாம் என்று கணக்குப் போட்டார். திவால் ஆனவர்களுக்கும், எழுச்சியோடு திரும்பி வந்தவர்களுக்குமிடையே அவர் கண்ட இரண்டு முக்கிய வித்தியாசங்கள்;

* தோற்றவர்களின் ஒரே இலக்கு பணம் பண்ணுவதுதான். இதற்கான தெளிவான திட்டம் எதுவும் இல்லை. ஜெயித்தவர்களோ, கஸ்டமர் சேவை, அவர்களுக்கு மிகக் குறைந்த விலை தருவது என்று இலக்கை நிர்ணயித்து, அவற்றை நோக்கிப் பயணித்தார்கள்.

* தோற்றவர்கள் காசைக் கரியாக்கினர்கள். ஜெயித்தவர்கள் கடைப்பிடித்தது சிக்கனம்..

இந்தப் பாடத்தை மறக்கவேகூடாது என்று ஜாக் மா முடிவு கட்டினார்.

அடுத்த கணிப்பு, குமிழி வெடிப்பு அலிபாபாவை எப்படிப் பாதிக்கும்? 2000 – ம் ஆண்டில் அலிபாபாவின் ஐ.பி.ஓ – வுக்கு அவர் திட்டமிட்டிருந்தார். பொதுமக்கள் சூடுகண்ட பூனைகளாய்ப் பங்குச் சந்தையிலிருந்தே விலகி நின்றார்கள். அதுவும், ஆன்லைன் கம்பெனி என்றால், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடினார்கள்.

இப்போது ஐபிஓ வந்திருந்தால் அம்போதான். கோல்ட்மேன் சாக்ஸும், சாப்ட் பேங்கும் பணம் தந்திருக்காவிட்டால் அலிபாபா காணாமலே போயிருக்கும். ஜாக் மா அவர்களுக்கு மனமார நன்றி சொன்னார். ஆமாம், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச். காலம் கனியும்வரை ஐபிஓ – வைத் தள்ளிப்போடவேண்டும். செலவில் சிக்கனம் காட்டவேண்டும். இரண்டுக்கும் ஜாக் மா தயார்.

ஒரு தலைவனின் ஆளுமைக்கு உரைகல், அவன் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான். துணிச்சலான முடிவெடுத்தலும், செயல்பாடுகளும், அவனைச் செம்மறியாட்டு மந்தையிலிருந்து தனித்துக் காட்டும், உயர்த்திக் காட்டும்.

ஆன்லைன் பிசினஸில் உலகளாவிய வெற்றிடம் இருப்பதை ஜாக் மா உணர்ந்தார். பொதுப் பிரச்சினையை அலிபாபாவின் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். நாளை நம் கம்பெனி இருக்குமோ, இருக்காதோ என்ற அச்சத்தால், விளம்பரங்களில் காசை அள்ளி வீசிக்கொண்டிருந்த ஆன்லைன் கம்பெனிகள் விளம்பரங்களை ஒட்டுமொத்தமாக நிறுத்தினார்கள்.

இதுவரை விலகி நின்ற ஜாக் மா டாட் டாம் (Todd Daum) என்னும் அமெரிக்க விளம்பரப் பட இயக்குநரைச் சந்தித்தார். அட்டகாசமான வீடியோ தயாரித்தார். CNBC, CNN ஆகிய அமெரிக்கத் தொலைக்காட்சிச் சேனல்களில் ஒளிபரப்பு. எல்லாம் சேர்த்து ஒரு பெர்ரீய்ய அமவுன்ட். அமெரிக்கத் தொலைகாட்சிச் சேனல்களில் விளம்பரம் செய்த முதல் சீன ஸ்டார்ட்–அப் கம்பெனி அலிபாபாதான்.

ஜாக் மாவின் தில். அலிபாபா கஸ்டமர்கள் எண்ணிக்கை 1,80,000 – இலிருந்து 3 லட்சமாக உயர்ந்தது. அமெரிக்காவின் பிரபல ஃபார்ச்சூன் குளோபல் (Fortune Global) பத்திரிகை ஆன்லைனில் தலை சிறந்தவர் என ஜாக் மா பற்றி அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது.

இங்கிலாந்தின் எக்கானமிஸ்ட் (Economist) பத்திரிகையில் ஒருவரிச் செய்தி வந்தாலே, தொழில் அதிபர்கள் கொண்டாடும் கோலாகலம். அந்த எக்கானமிஸ்ட், ராஜாவாகப்போகும் ஜாக் (The Jack who would be King) என்று முழுப்பக்கக் கட்டுரை எழுதியது.

ஜாக் மாவுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும், அவர்கள் கஜானாவில் இருந்த பணமும், போட்டியாளர்கள் மனங்களில் பொறாமைத் தீயை எழுப்பின. குளோபல் ஸோர்சஸ் (Global Sources) என்னும் சீன ஆன்லைன் கம்பெனி அலிபாபாவின் முக்கிய போட்டியாளர். இதன் தலைவர் டாக்டர் மெர்லே ஹின்ரிச் (Dr. Merle Hinrich) இந்த காழ்ப்புணர்ச்சியைக் கொஞ்சம் அநாகரிகமாகவே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

“எனக்கு ஒரு சொகுசுப்படகு இருப்பது உங்களுக்குத் தெரியும். அதை ஹாங்காங்குக்கு எடுத்துக்கொண்டு போவேன். அட்டகாசமாக ஒரு பார்ட்டி நடத்துவேன். சீனாவின் எல்லாப் பிரபலங்களையும் அழைப்பேன். ஒரே ஒருவர் மட்டும் வரக்கூடாது. அவர் ஜாக் மா.”

ஜாக் மாவின் சகாக்கள், நண்பர்கள், நடுநிலையாளர்கள் என எல்லோரும் ஆலோசனை சொன்னார்கள், ``இது திட்டமிட்டு உங்களை அவமானப்படுத்தும் செயல். மெர்லே ஹின்ரிச் தலை குனியும்படியாக அவருக்குப் பதிலடி கொடுங்கள்.”

ஜாக் மா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா? பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டினார். சொன்னார், ``போட்டியாளர்கள் தரும் அவமானங்களை உங்களால் சகிக்க முடியாவிட்டால், அவர்களால் நிச்சயமாகத் தோற்கடிக்கப்படுவீர்கள். அவர்களை எதிரிகளாக நினைத்தால், ஆட்டம் தொடங்கும் முன்பே, நீங்கள் அவுட். அவர்களைத் தொங்கவிட்டுக் குறிவைத்து ஈட்டிகளை எறிந்தால், ஒரே சமயத்தில் ஒருவரிடம் மட்டும்தான் மோத முடியும். போட்டி என்பது பெருமகிழ்ச்சி தரும் விளையாட்டு. அதை அனுபவித்து ஆடவேண்டும்.”

மெர்லே ஹின்ரிச் கப்சிப். இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் செய்துவிட்டார் ஜாக் மா.

ஆனால், ஜாக் மா என்னதான் பக்குவம், துணிச்சல் காட்டினாலும், மக்களின் நம்பிக்கையைத் தற்காலிகமாகத்தான் உயர்த்த முடிந்தது. ஏனென்றால், நடைமுறை நிலை அப்படி. முக்கியமான சீன ஆன்லைன் கம்பெனிகள் படுகுழியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தன. சீனா.காம் (China.com), நெட் ஈஸ்.காம் (NetEase.com), டாம்.காம் (Tom.com) ஆகிய கம்பெனிகளின் பங்குவிலைகள் 67 சதவீதம் சரிந்தன. அனைவரும் கணிசமான ஆட்குறைப்பு செய்தார்கள். துணிச்சல் முதலீட்டாளர்கள் ஒருவர்கூட இல்லை. அத்தனை பேரும் காணாமல் போய்விட்டார்கள். உலகின் பகுதிகளிலும் மாதம் ஒன்றாக நடந்துகொண்டிருந்த இன்டர்நெட் மாநாடுகள் கழுதை தேய்ந்து கட்டெறும்புக் கதை.

சாதாரணமாக ஜாக் மா மைக் பிடிக்கிறார் என்றாலே கூட்டம் அலைமோதும். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் இன்டர்நெட் 2000 என்னும் மாநாடு. 500 பேர் உட்காரும் அரங்கம். எப்போதும் பொங்கி வழியும். ஜாக் மா மேடை ஏறினார். பேச்சைக் கேட்க வந்தவர்கள் மூன்றே மூன்று பேர்! தனக்குள் போலி உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு ஜாக் மா பேசினார்.

கூட்ட ஏற்பாட்டாளர் சொன்னார், ``ஜாக் மா. அட்டகாசமான பேச்சு. கூட்டம் இல்லையே என்பதுதான் என் வருத்தம்.”

ஜாக் மா கண்களில் குறும்புச் சிமிட்டல். முகத்தில் சிரிப்பு.

“வருத்தப்படாதீர்கள். நான் அடுத்த முறை வரும்போது இந்த அரங்கம் நிறைந்திருக்கும்.”

இந்தப் பேச்சு வெளியுலக முகமூடி. உள்மனதில் சந்தேகம், இன்டர்நெட் அலை ஓய்கிறதா?

இந்த சந்தேகம் சீக்கிரமே கலக்கமானது. ஹாங்காங்கில் கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு கூட்டம் நடத்தினார்கள். பிரதமப் பேச்சாளர் ஜாக் மா. அரங்கில் ஆட்களைவிட அதிகமாய்க் காலி இருக்கைகள். கன்னத்தில் கைகள். கண்களில் சோகம். சொன்னார், ``பாதையின் முடிவு எனக்குத் தெரிகிறது.”

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x