Published : 09 Jun 2018 08:42 AM
Last Updated : 09 Jun 2018 08:42 AM

சொத்து மீட்பு நிறுவனம் பரிந்துரை வழங்க குழு அமைப்பு: மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் அறிவிப்பு

வங்கிகளில் வாராக் கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சொத்து மீட்பு நிறுவனம் (ஏஆர்சி) அமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஒரு குழு அமைக்கப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

2017-18-ம் நிதி ஆண்டுக்கான வங்கிகளின் நிதி நிலை முடிவுகள் வெளியான பிறகு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்தது. மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தலைமை தாங்கினார்.

பொதுத்துறை வங்கிகளுக்கு ஆதரவாக எப்போதும் அரசு துணை நிற்கும் என்று குறிப்பிட்ட கோயல், ஏஆர்சி நியமன குழு இரண்டு வாரத்தில் தனது பரிந்துரையை அளிக்கும் என்றார். இக்குழுவின் தலைவராக பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொறுப்புகள் இல்லாத தலைவராக உள்ள சுநீல் மேத்தா இருப்பார். இவர் சொத்து மீட்பு நிறுவனம் அல்லது சொத்து நிர்வாக நிறுவனம் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவார்.

வங்கிகளின் வாராக் கடன் குறித்த சொத்து மதிப்பீடுகளை ஏஆர்சி ஆராயும் என்று கோயல் கூறினார். இது தவிர வங்கிகள் தங்களது வாராக் கடன் குறித்து ஆராய மற்றும் கண்காணிக்க வங்கியில் அல்லாத பிற நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதை செயல்படுத்தலாம். இதன் மூலம் வாராக் கடன் சொத்துகளை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெறும் என்று கோயல் கூறினார்.

வங்கிகளின் நிதி நிலை, கடன் வழங்க போதிய நிதி உள்ளதா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட கோயல், கடனை திரும்ப செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடைப்பதில் எவ்வித சிரமமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று வங்கித் தலைவர்களைக் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

சில பொதுத்துறை வங்கிகளில் தலைவர்கள் இல்லாமல் உள்ளது. அனைத்து தலைமைப் பதவிகளும் இன்னும் 30 நாள்களில் நிரப்பப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x