

நியூயார்க்: முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் சமூக வலைதள பிரபலமாக இருந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் இடையிலான குத்துச்சண்டை போட்டியை நேரலை ஸ்ட்ரீம் செய்ய நெட்ஃபிளிக்ஸ் தளம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
58 வயதான மைக் டைசன் மற்றும் 27 வயதான ஜேக் பால் இடையிலான இந்தப் போட்டி தலைமுறைகள் கடந்த இரண்டு வீரர்களுக்கு இடையிலான போட்டியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் ‘ஏடி அண்ட் டி’ விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற இறுதி ஃபேஸ்-ஆஃப் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பாலை வலது கன்னத்தின் பக்கம் டைசன் அறைந்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானது.
நிச்சயம் இதற்கு ரிங்கில் பதிலடி கொடுப்பேன் என ஜேக் பால் சூளுரைத்துள்ளார். அது தனது கன்னத்தை கிள்ளியது போன்ற உணர்வை தந்ததாகவும் அவர் தெரிவித்தார். ‘இந்தப் போட்டியில் டைசனை நாக்-அவுட் செய்வேன்’ என்று அவர் கூறியுள்ளார். இந்த சூழலில் விளையாட்டு போட்டிகளில் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் செய்வது இப்போது ஒரு ட்ரெண்டாகி வருகிறது என சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த விளையாட்டு வல்லுநர் பாப் டோரஃப்மேன் தெரிவித்தார்.
கடந்த 2018-ல் குத்துச்சண்டை போட்டிகளை நேரலை செய்வதை நிறுத்திக் கொள்வதாக ஹெச்பிஓ அறிவித்தது. இந்த நிலையில் தான் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதை கையில் எடுத்துள்ளது. இதற்கு முன்னர் விளையாட்டு சார்ந்த கன்டென்ட்களை நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்துள்ளது. கோல்ஃப் மற்றும் டென்னிஸ் நிகழ்வுகள், பிரபலமான ‘ஃபார்முலா 1: டிரைவ் டு சர்வைவ்’ ஆவண தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஒளிபரப்பி உள்ளது.
இந்தப் போட்டியை அரங்கில் இருந்து சுமார் 80,000 பேர் பார்க்க உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி நேரலையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் 280 மில்லியன் பயனர்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.