Published : 17 Jun 2018 10:18 AM
Last Updated : 17 Jun 2018 10:18 AM

4 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற 151 ஆண்டுகள் ஆகும்: வாஷிங்டன் ஆய்வு நிறுவனம் கணிப்பு

முதுகலைப் பட்டம் பெற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கு 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று வாஷிங்டனைச் சேர்ந்த கால்டோ அமைப்பு கணித்துள்ளது.

அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன் கார்டு அட்டையானது அங்கு நிரந்தரமாக வசிக்கவும், பணி புரியவும் அங்கீகாரம் அளிப்பதாகும். 2017-ம் ஆண்டு அமெரிக்க குடியேற்ற துறை வழங்கிய கிரீன் கார்டு அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற 151 ஆண்டுகளாகும் என தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நிலவரப்படி 6,32,219 இந்தியர்கள் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மிகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகக் குறுகிய காலத்தில் இபி-1 குடியேற்ற சான்று வழங்கப்படுகிறது. இது வழங்கவே 6 ஆண்டுகளாகும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இபி-1 பிரிவில் விண்ணப்பித்து காத்திருப்போர் எண்ணிக்கை 34,824 ஆகும். இத்துடன் இவர்களது மனைவி, குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் இபி-1 விண்ணப்பித்து காத்திருப்போர் எண்ணிக்கை 83,578 ஆகும்.

இளங்கலை பட்டம் பெற்று காத்திருப்போர் கிரீன் கார்டு பெற 17 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் காத்திருப்போர் எண்ணிக்கை 54,892. இவர்களது குழந்தைகள், மனைவி ஆகியோருடன் சேர்த்து இப்பிரிவில் காத்திருப்போர் எண்ணிக்கை 1,15,273 ஆகும்.

இபி-2 நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் இருப்பதால் அதிக எண்ணிக்கையிலானோர் இப்பிரிவில் உள்ளதாக அந்த மையம் தெரிவிக்கிறது. இப்போது கிரீன் கார்டு வழங்கும் விகிதம் அடிப்படையில் இவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க 151 ஆண்டுகள் ஆகும்.

விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படாவிட்டால் இவர்கள் அமெரிக்காவிலேயே கிரீன் கார்டு கிடைக்காமல் இறக்க வேண்டியது அல்லது இந்தியாவுக்கு திரும்ப நேரிடும் என்று மையம் தெரிவித்துள்ளது.

இப்போது உள்ள விதிமுறைகள்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் பேருக்கு மேல் கிரீன் கார்டு வழங்கக் கூடாது என்று உள்ளது. ஆரம்ப நிலையில் 3,06,400 பேரும், இவர்களது மனைவி குழந்தைகளின் எண்ணிக்கை 3,25,819 பேரும் ஆக மொத்தம் 6,32,219 பேரும் காத்திருக் கின்றனர்.

2017-ம் ஆண்டில் 22,602 பேருக்குத்தான் சட்ட பூர்வ கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் இபி - 1 பிரிவினர் 2,879 பேர், இபி-2 பிரிவினர் 6,641 பேராவர். காத்திருப்போர் அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கப்படுவதில்லை. இபி-2 பிரிவில் 69 சதவீதம்பேர் காத்திருந்தாலும் 13 சதவீதம் பேருக்கே அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒவ்வொரு பிரிவுக்கும் 40,040 பேருக்கு கிரீன் கார்டு வழங்க அனுமதிக்கப்படுகிறது. இருந்தாலும் தேவை அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கும் பிரிவினருக்கு அல்லாமல் பொதுவாக கிரீன் கார்டு வழங்கப்படுவதால் தேங்கிக் கிடப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இபி-2 பிரிவைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாட்டிற்கும் என்ற அடிப்படையில் வழங்க வேண்டியுள்ளது. ஒரு நாட்டுக்கு 7 சதவீத அளவுக்கு வழங்க வேண்டியிருந்தாலும் இந்தியா சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் 18 சதவீதம் பேருக்கு கிரீன் கார்டு கிடைக்கிறது. அதிலும் இபி-3 பிரிவில் அதிகமானோருக்கு 2017-ல் கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

உதாரணமாக இபி -3 பிரிவில் வழங்கப்படுவோர் அடிப்படையில் அளித்தால் 2017-ல் வழங்கப்பட்டவர்கள் குறைந்தது 65 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் இத்தனை பேர் என்ற அடிப்படையில் இபி-3 அனுமதி வழங்கப்படுமாயின் அதற்கு 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் 17 ஆண்டுகளிலேயே கிடைத்துள்ளதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x