

ஐசிஐசிஐ வங்கி லாபம் 17% உயர்வு
முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐயின் நிகரலாபம் 17% உயர்ந்து ரூ.2,655 கோடியாக இருக்கிறது. வட்டி மற்றும் வட்டியல்லாத வருமானம் உயர்ந்ததுதான் இதற்கு காரணம். கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,274 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிகர வட்டி வருமானம் 18% உயர்ந்து ரூ.4,492 கோடியாக இருக்கிறது. கடன் விகிதம் 15% உயர்ந்து ரூ. 3.47 லட்சம் கோடியாக இருக்கிறது. அதேபோல டெபாசிட்டும் 15 சதவீதம் உயர்ந்து ரூ. 3.35 லட்சம் கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 3.05 சதவீதமாக குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3.3 சதவீதமாக இருந்தது.
மாருதி சுசூகி லாபம் 20.7% உயர்வு
மாருதியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 20.7% உயர்ந்து ரூ. 762 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.631 கோடியாக இருந்தது. செலவுகளை குறைத்தது, விற்பனையை அதிகரித்தது, செலாவணி மாற்று விகிதத்தால் கிடைத்த வருமானம் ஆகியவற்றின் காரணமாக நிகர லாபம் உயர்ந்தது.
முதல் காலாண்டின் நிகர விற்பனை 10.78% உயர்ந்தது. கடந்த வருடம் ரூ.9,995 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.11,073 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டு ஆரம்பிக்கும்போது விற்பனை மோசமாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு நிலைமை மாறியது என்று நிறுவனத்தின் சிஎப்ஓ அஜய் சேத் தெரிவித்தார்.
டெக் மஹிந்திரா நிகர லாபம் 8% சரிவு
இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஐடி நிறுவனமான டெக் மஹிந்திராவின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 8.1 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 686 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 630 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. ஆனால் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2.6% உயர்ந்திருக்கிறது. மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.614 கோடியாகும்.
ஆனால் வருமானம் 24.8% உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் ரூ. 4,103 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ. 5,121 கோடியாக உயர்ந்திருக்கிறது. மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது வருமானம் 1.2% உயர்ந்திருக்கிறது. மார்ச் காலாண்டு வருமானம் ரூ. 5,058 கோடியாகும்.
ஹெச்.சி.எல். டெக் லாபம் 53.7% உயர்வு
இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு (நான்காம் காலாண்டு) நிகர லாபம் 53.7 சதவீதம் உயர்ந்து ரூ.1,834 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,193 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 20.7 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 6,980 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.8,424 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வருடத்தில் வருமானம் 500 கோடி டாலர் என்ற உச்சத்தை அடைந்திருக்கிறோம். எங்களுக்கு இது முக்கியமான ஆண்டாகும் என்று நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த குப்தா தெரிவித்தார்.