

கோவை: நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகளை இயக்குவதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டி வரும் நிலையில், நவீனப்படுத்தப்பட்ட 12 நூற்பாலைகளையாவது மீண்டும் இயக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கோவையில் 5, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் மொத்தம் 7 நூற்பாலைகள் உள்பட நாடு முழுவதும் 23 என்டிசி நூற்பாலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கரோனா தொற்று பரவலுக்கு பின் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 4,000 தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி கூறியதாவது: நாடு முழுவதும் 123 என்டிசி நூற்பாலைகள் செயல்பட்டுவந்த நிலையில் இதன் எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது. கரோனா தொற்று பரவல் காலத்தில் தொடங்கி தற்போது வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நூற்பாலைகளையும் இயக்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசு மற்றும் என்டிசி தலைமையக அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், நூற்பாலைகளை இயக்கினால் லாபகரமாக இருக்காது என கூறி மீண்டும் உற்பத்தி தொடங்குவதை தவிர்த்து வருகின்றனர். கோவை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் உள்படநாடு முழுவதும் 12 என்டிசி நூற்பாலைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அந்த நூற்பாலைகளையாவது இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உற்பத்தி நிறுத்தம் தொடங்கிய காலத்தில் பணி வாய்ப்பு இல்லாத போதும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முழு ஊதியம் வழங்கப்பட்டது. சில காலத்துக்கு பின் மாத ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் வலியுறுத்தல் காரணமாக 2020 மே மாதம் முதல் 2023 ஜூன் மாதம் வரை நிலுவை வைக்கப்பட்ட ஊதிய தொகையை தொழிலாளர்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இதற்காக ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சந்தையில் உற்பத்தி தொடங்க நல்ல வாய்ப்பு உள்ள சூழலில், தொழிலாளர்கள் அனைவரும் பணியாற்ற தயாராக உள்ள நிலையில் வேண்டுமென்றே உற்பத்தியை முடக்குவது மிகவும் தவறு. எனவே, தொழிற்சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
நாடு முழுவதும் என்டிசி நூற்பாலைகளுக்கு சொந்தமாக கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட நிலம் உள்ளது. அவற்றை விற்பனை செய்தால் கிடைக்கும் தொகையை தொழிலாளர் நலன், என்டிசி தொழில் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதி உள்ளது. எனவே, நிதி ஆதாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசு என்டிசி நூற்பாலைகளை மீண்டும் இயக்க அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.