தமிழகத்தில் உயரும் பூண்டு விலை: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.380-க்கு விற்பனை
சென்னை: தமிழகத்தில் பூண்டு விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் இன்று (நவ.8) பூண்டு கிலோ ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான சமையல் வகைகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் சமைக்கப்படுவதில்லை. குறிப்பாக, அனைவரும் விரும்பி உண்ணும் பிரியாணிக்கு இவை முக்கியமான பொருளாகும். தமிழகத்தில் தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பூண்டின் விலையும் உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி பூண்டு உற்பத்தியில் தேசிய அளவில் மத்திய பிரதேசம் ஆண்டுக்கு 18.49 லட்சம் டன்னுடன் முதலிடத்திலும், 4.16 லட்சம் டன்னுடன் ராஜஸ்தான் 2-ம் இடத்திலும் உள்ளது. தமிழகம் ஆண்டுக்கு 7 ஆயிரத்து 150 டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது. தமிழகத்தில் 1,240 ஹெக்டேர் பரப்பில் மட்டுமே பூண்டு பயிரிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் பூண்டு தேவைக்கு மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலையே உள்ளது. அங்கிருந்து கொண்டு வரும் செலவு காரணமாக எப்போதும் பூண்டின் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரமாக பூண்டின் விலையும் உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.380 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக கோயம்பேட்டில் பூண்டு மொத்த வியாபாரம் செய்து வரும் மதர் கார்லிக் கம்பெனி உரிமையாளர் நந்தகோபால் கூறியதாவது: “பூண்டில் பொடி, பூனா லட்டு, லட்டு, முதல்தரம் என பல வகைகள் உள்ளன. இதில் ஏழை எளிய மக்கள் வாங்கும் பொடி பூண்டு தற்போது ரூ.205-லிருந்து ரூ.240 ஆகவும், ஏழை மற்றும் நடத்தர மக்கள் வாங்கும் லட்டு வகை பூண்டு ரூ.330-லிருந்து ரூ.380 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த பூண்டு தான் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது.
சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் முதல்தர பூண்டு ரூ.440-லிருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஏறக்குறைய இதே விலையில் தான் பூண்டு விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் பூண்டு வருகிறது. தற்போது சீசன் முடிவடையும் காலம் என்பதால் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று அவர் கூறினார்.
