

சென்னை: அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலியாக நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்தது. இன்று (நவ.8) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிக்குத் தள்ளியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் பவுனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக தீபாவளி நாளன்று (அக்.31) ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
அதன் பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று (நவ.7) அதிரடியாக குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,280-க்கு விற்பனையாகிறது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.103-க்கு விற்கப்படுகிறது.