

புதுடெல்லி: இந்திய உணவு கழகத்துக்கு (எப்சிஐ) கூடுதல் மூலதன நிதியாக ரூ.10,700 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் எப்சிஐ தனது சேமிப்பு வசதிகளை நவீனப்படுத்தும். போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்தும். நுகர்வோருக்கு உணவு தானியங்களை திறம்பட விநியோகிக்கும் என்று மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: கடந்த 1964-ம் ஆண்டு இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டில் எப்சிஐ-யின் மூலதனம் ரூ.11,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக அதிகரித்தது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.4,496 கோடியாக இருந்த எப்சிஐ-யின் பங்கு 2023-24-ம் நிதியாண்டில் ரூ.10,157 கோடியாக அதிகரித்துள்ளது.
இப்போது, ரூ.10,700 கோடி நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய உணவுக் கழகத்தை நிதி ரீதியாக வலுப்படுத்தும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.