Last Updated : 24 Jun, 2018 10:11 AM

Published : 24 Jun 2018 10:11 AM
Last Updated : 24 Jun 2018 10:11 AM

`ஸ்மார்ட்போனால் ஆன்லைனில் ஆடை விற்பனை உயரும்’

ஸ்

மார்ட்போன் வந்த பிறகு இ-காமர்ஸில் பொருட்கள் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு கிளிக்கில் நாம் விரும்பிய பொருட்களை, ஆடைகளை வாங்குகிறோம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றுக்கு பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. பேஷன் பிரிவில் முக்கிய நிறுவனமான மிந்திரா நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள பெங்களூருவில் உள்ள அலுவலகம் மற்றும் கிடங்குக்கு சென்றோம்.

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் நாராயணனின் நேர்காணலுக்கு முன்பாக நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

ஆடைகளை ஆன்லைனில் விற்பது என்பது கொஞ்சம் சிரமமானது. ஸ்மார்ட்போன் என்றால் அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் ஆடைகள் என்னும் பட்சத்தில் அளவு, வண்ணம் என பல வகைகளிலும் வேறுபடுத்தி காட்ட வேண்டி இருக்கும். இதற் காக அலுவலகத்தில் சில ஸ்டூடியோக்கள் உள்ளன. இவற்றில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவர்களுடைய இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆடையின் அளவு, வண்ணம், எந்த வகை துணி என்பது குறித்த விளக்கம் எழுதுவதற்கென பிரத்யேக குழு வேலை செய்கிறது. இவை அலுவலகத்தில் என்றால், கிடங் கில் வேறு மாதிரியான பணிகள் நடக்கின்றன. ஆட்டோமொபைல் நிறுவனத்தின் `அசெம்பிளி லைன்’ போல கிடங்கு இருக்கிறது.

உதாரணத்துக்கு வாடிக்கையாளர்கள் ஒரு `டீ ஷர்ட்’ ஆர்டர் செய்கிறார் என்றால் கிடங்கில் அந்த டீ ஷர்ட் எந்த வரிசையில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கண்டறியும் தொழில் நுட்பத்தை வைத்திருக்கிறார்கள். அப்படி எனில் கிடங்குக்குள் வரும்போதே, ஒவ்வொரு ஆடையின் வரிசையும் தீர்மானம் செய்யப்பட்டு வகைப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம். ``நாங்கள் பேஷன் பொருட்களை விற்கும் நிறுவனமல்ல, நாங்கள் டெக்னாலஜி நிறுவனம்’’ என தலைமைச் செயல் அதிகாரி கூறுவதை புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும் ரோட்ஸ்டெர் என்னும் ஸ்டோரினை இந்த நிறுவனம் பெங்களூருவில் தொடங்கி இருக்கிறது. இவர்கள் வடிவமைத்த டெக்னாலஜி மூலம் தேர்ந்தெடுத்த ஆடைகளை மெஷினில் வைத்தால் எவ்வளவு தொகை என்பதை காண்பிக்கும். ஒருவேளை நீங்கள் நிர்ணயம் செய்த பட்ஜெட்டை விட அதிகமாக இருந்தால் எதேனும் ஆடையை எடுத்துவிடலாம். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளரே பில் செய்து, பணத்தை கட்டிவிட்டு வரலாம். இன்னும் சில ஆண்டுகளில் இதுபோல 100 ஸ்டோர்களை திறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இனி ஆனந்த் நாராயணின் நேர்காணலில் இருந்து...

நீங்கள் பொறியியல் படித்தவர். ஆனால் மெக்கென்ஸி என்பது தொழில் ஆலோசனை நிறுவனம். எப்படி மெக்கென்ஸிக்குள் சென்றீர்கள்?

நான் படிக்கும் போது மெக்கென்ஸி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. குமின்ஸ் நிறுவனத்தில் சேரலாம் என்னும் எண்ணத்தில்தான் இருந்தேன். கேம்பஸ் தேர்வில் என்னை நேர்காணல் செய்த மெக்கென்ஸி அதிகாரிகள் நன்றாக பேசியது எனக்கு ஆர்வத்தை தூண்டியது. ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் 15 ஆண்டுகள் மெக்கென்ஸியில் பணிபுரிந்தேன்.

நீங்கள் அனலிஸ்டாக இருந்தவர். மிந்திராவின் தலைமைச் செயல் அதிகாரியாக எப்படி தேர்வானீர்கள்?

40 வயதுக்குள் சிறந்த 40 நபர்கள் பட்டியலை எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டது. இதில் நானும் பிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சாலும் இருந்தோம். அந்த நிகழ்ச்சியில்தான் அவரை முதலில் பார்த்தேன். அதில் இருந்து நாங்கள் அடிக்கடி உரையாடத் தொடங்கினோம். என்னுடைய இன்னொரு நண்பர் பிளிப்கார்ட்டில் இணைந்தார். அவர் மிந்திராவின் நிறுவனர் முகேஷ் பன்சாலுடன் (மிந்திரா நிறுவனத்தை பிளிப்கார்ட் கையகப்படுத்தியது) அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் மிந்திராவை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். ரிஸ்க்கான முடிவுதான். ஆனாலும் மூன்று ஆண்டுகள் சிறப்பாக முடிந்திருக்கிறது.

இதற்கு முன்பு நீங்கள் ஆலோசனை மட்டுமே வழங்கி வந்தீர்கள். புதிய துறை சார்ந்த நிறுவனத்தை கையாளுவது என்பது எப்படிப்பட்ட சவாலாக இருந்தது?

ஆலோசனை வழங்கினாலும் அவை எப்படி செயல்படுத்தப்பட்டிருக்கிறது, அவற்றின் முடிவுகள் என்ன என்பது குறித்து மதிப்பிடப்படும். தவிர 15 ஆண்டுகளாக ஒரு துறையை எப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைதான் கற்றுக்கொண்டிருக்கிறேன். மெக்கென்ஸியில் இருக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு துறை சார்ந்த நிறுவனங்களிலும் பணிபுரிய வேண்டி இருக்கும். அதனால் இங்கு செயல்படுவது எளிதாக இருந்தது.

டெலிகாம் துறையை எடுத்துக்கொண்டால் அதிக கடனில் இருக்கும் நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் வாங்கவில்லை. காரணம் வாடிக்கையாளர்கள் யாராவது ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் சென்றுதான் ஆக வேண்டும். அதுபோல ஜபாங்கை ஏன் வாங்க வேண்டும்? (கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்லத்தொடங்குகிறார்)

உங்கள் கேள்வி எனக்கு புரிந்தது. பேஷன் தொழிலை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு சாய்ஸ் தேவையாக இருக்கிறது. வெவ்வேறு இணையதளங்களில் சென்று ஆராய்ந்து வாங்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் நினைப்பார்கள். தவிர மிந்திரா மற்றும் ஜபாங்க் ஆகிய இரு இடங்களிலும் ஆடைகளை வாங்குபவர்கள் 30 சதவீதம்தான். ஜபாங்கை வாங்குவதன் மூலம் மீதமுள்ள 70 சதவீத வாடிக்கையாளர் எங்களுக்கு கிடைப்பார்கள். தவிர இரு நிறுவனங்களும் இணைந்திருப்பதால் சப்ளை செயின், தொழில்நுட்பம் போன்றவற்றில் பல இடங்களில் இணைந்து செயல்படமுடியும். தவிர பேஷன் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும்போது நம்மால் விலையில் ஆதிக்கம் செலுத்த முடியும். பேஷன் பிரிவில் ஜபாங் இரண்டாம் இடத்திலும், மிந்திரா முதல் இடத்திலும் இருக்கிறது. இரு நிறுவனங்கள் இணைவதால் மொத்த சந்தையில் 42 சதவீதம் எங்கள் வசம் இருக்கிறது.

ஏற்கெனவே பிளிப்கார்டில் ஆடைகள் பிரிவு இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் வராதா?

துணிமணிகள் வாங்குவது என்பது வேறு. பேஷன் வாங்குவது என்பது வேறு. மிந்திராவில் நாங்கள் விற்பது பேஷன்.

நீங்கள் மெட்ரோ நகரங்களுக்கு அடுத்து இருக்கும் நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆனால் சிறு நகரங்களில் இருப்பவர்களின் முக்கிய பொழுதுபோக்கே துணி வாங்குவதாக இருக்கும். அவர்கள் எப்படி ஆன்லைனில் வருவார்கள்?

இப்போது சிறு நகரங்களில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அவர்கள் பேஷன் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் சிறு நகரங்களில் பெரிய மால்கள் இருக்காது. பெரிய பிராண்ட்கள் சிறு நகரங்களில் ஷோரூம் தொடங்குவது லாபமாக இருக்காது. அதனால் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு ஆன்லைன்தான்.

தற்போது ஆன்லைனில் ஆடைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம். இந்த விகிதம் தொடர்ந்து உயரும்.

துணி வகைகளில் பிரைவேட் லேபிள் இருப்பது போல, அழகு சாதன பொருட்கள் பிரிவில் பிரைவேட் லேபிள் பொருட்களை கொண்டுவரும் திட்டம் இருக்கிறதா?

இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு அதிக விவரங்கள் வெளியிட முடியாது. பல விஷயங்களை ஆராய்ந்து வருகிறோம். செப்டம்பர் அல்லது அக்டோபரில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

பிளிப்கார்ட்டில் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கி இருக்கிறது. இதனால் நடந்த மாற்றம் என்ன?

எந்த மாற்றமும் இல்லை. வால்மார்ட் நிதி சார்ந்த முதலீட்டாளர்கள். இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் ஐபிஓ வெளியிட வேண்டும் என்னும் இலக்கில் செயல்பட்டு வருகிறோம்.

karthikeyan.v@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x