

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் குடும்பத்தினருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நோய்குறித்து ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் தவிர்த்து மற்றொரு மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம். அதற்கு இந்த காப்பீட்டுத் திட்டத்தில் வசதி உள்ளது. இதன்படி இந்நிறுவனம் அளித்துள்ள கட்டணமில்லா தொலைபேசி மூலமாக சர்வதேச மருத்துவ மையங்களில் உள்ள மருத்துவரிடம் இரண்டாவது ஆலோசனை பெற வழி செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ ஆலோசனை மிக முக்கியமான அறுவை சிகிச்சை மேற்கொள்வோருக்கு உதவியாக இருக்கும். இந்த ஆலோசனை 10 நாள்களில் பெற்றுத் தரப்படும்.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாகும். அதிகபட்சம் ரூ. 10 லட்சம்வரை காப்பீடு செய்யலாம். சில குறிப்பிட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் காப்பீட்டு அளவும் உயர்த்தப்பட்டுள்ளது.